ஒரே சோதனையில் ஒமைக்ரான் தொற்றை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் புதிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கருவிக்கு ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் உருமாறிய ஒமைக்ரான் தொற்றினை கண்டறிய பல்வேறு நடைமுறைகள் கையாளபடுகின்றன. முதலில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் பாசிட்டிவ் வந்தவர்களுக்கு டேக்பாத் கருவி மூலம் தொற்று உருமாறியுள்ளதா? எனவும் மரபணு பகுப்பாய்வு மூலம் ஒமைக்ரான் தொற்று இருக்கிறதா எனவும் கண்டறியப்படுகிறது.
கொரோனா உறுதி செய்யப்பட்டு, டேக்பாத் பரிசோதனை செய்து அதன் பிறகு மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி முழு விவரம் பெற்ற சுமார் 7 நாட்கள் வரை ஆகின்றன.
இதனால் விரைந்து பரிசோதனை முடிவுகளை பெற டாடா மருந்து நிறுவனம் TATA MD CHECK RT-PCR Omisure என்ற பரிசோதனை கருவியை கண்டறிந்துள்ளது.
இந்த புதிய கருவி ஒரே சோதனையில் ஒமைக்ரான் தொற்றினை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த புதிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கருவிக்கு ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமைக்ரான் தொற்றினை எளிதில் கண்டறியும் இந்த கருவி மூலம் குறிப்பிட்ட கால அளவில் அதிகளவில் ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரவும் தன்மையை கட்டுபடுத்த முடியும் என்றும் சொல்லபடுகிறது.
அண்மையில் ஒமைக்ரான் குறித்து மரபணு பகுப்பாய்வு மேற்கொள்ள மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூட்டமைப்பினால் தமிழக மரபணு பகுப்பாய்வு மையத்தை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
முன்னதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெங்களூரு – இன்ஸ்டம், ஐதராபாத் – சி.டி.எப்.டி, மற்றும் புனே – என்.ஐ.வி. உள்ளிட்ட மரபணு பகுப்பாய்வகங்களுக்கே மாதிரிகள் அனுப்பப்படும் சூழல் இருந்தது.
இதில், முடிவுகள் வர தாமதம் ஏற்படுகிறது என்பதால் சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள மரபணு பகுப்பாய்வு மையம் அனுமதி கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டாடா நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த கருவி பரிசோதனை முறையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிந்த பிறகே கொள்முதல் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.