
ஓமிக்ரான் கேஸ்கள் மிக வேகமாக உயர்ந்து வரும் நிலையில் அதை பற்றிய தவறான கண்ணோட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று யு.கே மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்
உலகம் முழுக்க ஓமிக்ரான் கேஸ்கள் காட்டுத்தீ போல பரவி வருகிறது. முதல் இரண்டு அலைகளில் கொரோனா கேஸ்கள் எந்த வேகத்தில் உயர்ந்தது அதை விட மிக அதிக வேகத்தில் ஓமிக்ரான் காரணமாக கேஸ்கள் பரவி வருகிறது.
பல நாடுகளில் ஏற்கனவே 3 அலை ஏற்பட்ட நிலையில் தற்போது 4ம் அலை பரவலை ஓமிக்ரான் ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் தினசரி கொரோனா கேஸ்கள் 10 லட்சத்தை நெருங்கும் அளவிற்கு கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. ஓமிக்ரான் கேஸ்கள் கொஞ்சம் மைல்ட்டாக இருக்கும் என்ற எண்ணம் உலகம் முழுக்கவே இருக்கிறது.
அதாவது ஓமிக்ரான் வேகமாக பரவினாலும் இதனால் மோசமான பாதிப்பு ஏற்படாது. இதனால் பாதிப்பு என்னவோ மைல்டாகவே இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் காய்ச்சல், சளி போன்ற சாதாரண அறிகுறிகளே ஏற்படுகிறது. இதில் தீவிரமான பாதிப்புகள் எதுவும் இல்லை என்ற கண்ணோட்டம் உலகம் முழுக்க உள்ளது.
இதனால் ஓமிக்ரான் கேஸ்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்த போவது இல்லை என்றே பலரும் நினைத்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் ஓமிக்ரான் கேஸ்கள் குறித்து University of Cambridgeன் மருத்துவ நிபுணரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரவீந்திர குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வைரஸ் கொஞ்சம் வலிமை குறைந்தது என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. ஆனால் ஓமிக்ரான் எந்த வகையிலும் மைல்ட்டாக மாறவில்லை. வைரஸ் என்பது உருமாற்றம் அடைய கூடியது. அது உருமாற்றம் அடையும் போது அதன் பண்புகள் மாறலாம். முக்கியமாக நாம் வேக்சின் உலகத்தில் இருக்கிறோம்.
இதனால் வைரஸ் இதற்கு ஏற்றபடி தனது பயாலஜியை மாற்றிக்கொண்டே இருக்கும். இப்போது ஓமிக்ரான் காரணமாக ஆங்காங்கே வலிமை குறைவான கேஸ்கள் ஏற்படலாம்.
ஆனால் இது இப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்க கூடாது. தீவிரமான கேஸ்கள் வரும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் ஓமிக்ரான் பரவலால் மேலும் சில புதிய வகை கொரோனா தோன்றும் வாய்ப்புகள் உள்ளன.
அந்த உருமாறிய வகை கொரோனா எல்லாம் இதேபோல் ஆற்றல் குறைவாக இருக்கும் என்றும் மட்டும் நினைத்துவிட கூடாது. அது இன்னும் மோசமான பலம் கொண்ட கொரோனாவாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது.
இதை இயற்கை அனுப்பிய வேக்சின் என்றெல்லாம் தப்பு கணக்கு போட கூடாது. ஏனென்றால் இது மேலும் மேலும் அதிகரித்தால் பல புதிய வகை கொரோனா தோன்றும். அவை இன்னும் தீவிர தன்மை கொண்டதாக இருக்கும் அபாயம் உள்ளது.
ஓமிக்ரான் குறித்து இன்னும் முழுமையாக உலகம் அறிந்து கொள்ளவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஓமிக்ரான் ஆபத்து குறைவானது.
இது வேகமாக பரவட்டும், அதனால் மக்களுக்கு எதிர்ப்புசக்தி கிடைக்கும் என்ற தப்பு கணக்கை மட்டும் யாரும் போட்டுவிட வேண்டாம். வேக்சின் மட்டுமே நம்முடைய ஆயுதம். பரவலை முடிந்த அளவு நாம் தடுக்க வேண்டும். அப்போதுதான் புதிய உருமாறிய கொரோனா கேஸ்கள் தோன்றாது, என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.