
பாகுபலி’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் இயக்குநர் ராஜமௌலி. தெலுங்கில் மட்டும் தெரிந்த முகமாய் இருந்த ராஜமௌலி, பாகுபலிக்கு பிறகு அவர் அடுத்த என்ன படம் இயக்குவிருக்கிறார் என்ற ஆவலுடன் இருந்த நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்.,’ என்ற பிரமாண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது.
அந்தப் படத்தில் பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்துள்ளர்.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் இருந்து மேக்கிங் வீடியோக்கள், முன்னோட்ட காட்சிகள் உள்ளிட்டவை வெளியிடப்பட்ட நிலையில் படத்தில் இருந்து நாட்டு நாட்டு பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது.
அந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆரும், ராம் சரணும் ஆடிய ஆட்டம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஈர்த்தது. பலரும் அந்தப் பாடலில் வருவது போலவே நடனம் ஆடி வீடியோக்களை தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் அதே பாடலின் பின்னணியில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் உலா வந்துக் கொண்டிருக்கிறது.
அதில் பழைய காமெடி நடிகர்கள் Laurel and Hardy ஆடுவது போல் ரீல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூகவலைதளங்களில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்த நிலையில், படம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
படத்தின் ப்ரோமோஷனுக்காக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மும்பை என ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டீஆர் பறந்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் கொரோனா, ஒமிக்ரான் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து படக்குழு வெளியிட்ட அறிக்கையில், ‘ சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நலன்களையும் மனதில் வைத்து, எங்கள் படத்தை தள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
நிபந்தனையற்ற அன்பிற்காக அனைத்து ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி’ என படக்குழு அறிவித்துள்ளது.