சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகை குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில்
மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்பே காங்கிரஸ் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
ராகுல் காந்தி வருகிற 28-ந் தேதி சென்னை வருகிறார். முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களின் ஒருவன்” என்கிற நூலை ராகுல் காந்தி வெளியிடுகிறார்.சென்னை வருகை தரும் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர்கள் தலைமையில், வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில், தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுடன் ராகுல் காந்தி கலந்து கொண்டு ஆலோசனை செய்கிறார்.
இதில், உள்ளாட்சியில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பற்றியும், காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்திருத்தம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.
இதுகுறித்து இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில்
கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துக் கொண்டு இருந்தபோது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமரும் மேடையில் ஐ.என்.டி.யூ.சி. தலைவர் முனுசாமி அமர்ந்ததற்கு, முன்னாள் நிர்வாகி பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து ஒருமையில் பேசி மேடையிலிருந்து அவரை கீழே இறங்கும்படி கூறினாராம். இதன் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்பே இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
நிர்வாகிகளின் மோதல் போக்கு காரணமாக செய்வதறியாமல் திகைத்த மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி திக்குமுக்காடினார். இரு தரப்பினரும் மாறி மாறி தகாத வார்த்தையால் திட்டி சண்டையிட்டனர்.இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் ஐ.என்.டி.யூ.சி. அலுவலகத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உருவப்படத்தை பன்னீர்செல்வம் சேதப்படுத்தியதாக முனுசாமி கட்சி தலைமையிடம் புகார் செய்து பன்னீர்செல்வத்தை நீக்கும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது.





