பெண்கள் சபரிமலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடைவிழாவில் முக்கிய நிகழ்வாக நாள் செவ்வாய் கிழமை நள்ளிரவு ஒடுக்குபூஜை நடைபெறும்.
இக்கோயில் திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் இன்று இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவெட்டி அலங்கார பவனி வருதலும் நடைபெறுகிறது.
விழாவின் 10-ம் திருவிழாவான நாளை செவ்வாய்க் கிழமை அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது களப பவனி வருதலும், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 4.30 மணிக்கு அடியந்திரபூஜை, காலை 6 மணிக்கு குத்தியோட்டம் ஆகியவை நடக்கிறது. மாலை 4 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் சமய மாநாடு நடக்கிறது. மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நலத்திட்ட உதவி வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபா ராதனையும், இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது. முன்னதாக இந்த பூஜையின் சிறப்பு அம்சமாக பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் அடங்கிய சுமார் 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சுத்தமான முறையில் விரதம் இருந்தவர்களால் தயாரிக்கப்படுகிறது. பின்னர் அருகாமையில் உள்ள சாஸ்தா கோவில் பக்கம் இருந்து ஒடுக்கு பூஜை பவனி வருகிறது. பூஜைக்கு எடுத்துக் கொள்ளப்படும் உணவு வகைகளில் வெள்ளைத் துணியால் மூடி ஊர்வலமாக எடுத்து வரப்படும். பூஜைக்கான உணவு வகைகள் பூசாரிகள் தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருகிறார்கள். பின்னர் கோவிலை ஒருமுறை வலம் வந்து அம்மனின் முன்பு உணவு வகைகள் வைக்கப்படும்.
தொடர்ந்து கோயில் திரு நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மஞ்சள் நீர், சுண்ணாம்பு ஆகிய பொருட்களால் குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக புறை மேளம் அடிக்கப்படுகிறது. அதன் பின்னர் நடை திறக்கப்பட்டு பூஜை நடக்கிறது. ஒடுக்கு பவனியின் போதும் பூஜை நடக்கும் போதும் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பூரணமான அமைதியான சூழலில் எந்தவித ஓசையும் இன்றி காணப்படும்.
இந்த பூஜையை காண மண்டைக்காட்டில் பக்தர்கள் இன்று ஆயிரக்கணக்கில் முகாமிட்டுள்ளனர்.





