
வசந்த காலத்தை வரவேற்கும் விதத்தில் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி ஹோலியை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் மக்கள்.
வண்ணங்களின் பண்டிகையான ஹோலி எப்படி வந்தது, அதன் புராண கதைகளான ஹோகிகா பிரகலாதன் கதை, சிவன் பார்வதி காதலுக்கு உதவ நினைத்த மன்மதனின் கதை, கிருஷ்ணர் ராதா காதல் கதையில், கண்ணன் கருமையாக இருப்பதாக வருத்தப்பட்ட கதையை இங்கு காண்போம்.

வண்ணங்களின் பண்டிகையான ஹோலி, வட இந்தியாவில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் பரவலாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த தினத்தில் வர்ணப் பொடிகளைத் தூவி, இனிப்புகளை பரிமாறி சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படுகின்றது.
ஹோலி அல்லது அரங்க பஞ்சமி என அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனி கால பண்டிகை. ஹோலி பண்டிகை தமிழ் மாதங்களில் இறுதி மாதமான பங்குனி மாத பெளர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது.

துலன்னி என அழைக்கப்படும் ஹோலியின் முக்கிய நாளில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளையும், வண்ணங்கள் கலந்து பொடிகளை கலந்து தெளித்து விளையாடி மகிழ்வது வழக்கம்.
அந்த நாளுக்கு முன்னதாக பெரிதாக நெருப்பு மூட்டி கொண்டாடுவார்கள். அதற்கு சோட்டி ஹோலி அல்லது ஹோலிகா தகனம் என அழைக்கப்படும்
அசுரர்களில் ஒருவனான இரணிய கசிபு பிரம்மனை வேண்டி கடும் தவத்தினால் சிக்கலான ஒரு வரம் கேட்டார். அதாவது பகலிலும், இரவிலும் என்னை கொல்ல முடியக்கூடாது. வீட்டிலும், வெளியிலும், எந்த ஆயுதத்தாலும் கொல்லக்கூடாது என பல விதிகளுடன் சிக்கலான ஒரு வரத்தைக் கேட்டார்.

அப்படி ஒரு வரத்தைப் பெற்ற இரணியகசிபு தன்னையே இறைவனாக பிரகணப்படுத்திக் கொண்டான். அனைவரும் தன்னை மட்டும் தான் வணங்க வேண்டும் என கட்டளையிட்டான். மண்ணையும், விண்ணையும் தனக்கு கீழ் கொண்டு வந்தான்.
அப்படி இருக்க அவனின் மகனான பிரகலாதன் தீவிர விஷ்ணு பக்தனாக இருந்தான் . அவனைக் கொல்ல பல வழிகளை முயற்சித்த இரணிய கசிபுவுக்கு ஏற்பட்டது தோல்வி மட்டுமே.
இரணிய கசிபுக்கு ஹோலிகா என்ற சகோதரி இருந்தாள். அவள் மாயப் போர்வை வரமாக பெற்றிருந்தால். அதன் படி ஒரு பெரிய தீ மூட்டி, அதில் பிரகலாதனுடன் அமர்ந்தாள்.

அப்போது பிரகலாதன் மகாவிஷ்ணுவை வேண்டியதும் அந்த போர்வை பறந்து பிரகலாதனை மூடிக்கொண்டது. ஹோலிகா நெருப்பில் எரிந்து உயிர்விட்டாள்.
தீயிலும் பிரகலாதன் சாகாமல் இருப்பதைப் பார்த்த மக்கள் பிரகலாதனைப் போற்றினர்.
இந்த ஹோலி பண்டிகைக்கு முன் தினம் தான் ஹோலிகா தகனம் என தீமூட்டி கொண்டாடப்படுகிறது.
இப்படி தீங்கிழைக்க நினைத்த ஹோலிகா தீயில் பலியானதை ஹோலி என கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணர் – ராதை காதலித்து வந்த போது, கிருஷ்ணர் தான் கருப்பாக இருப்பதாகவும், ராதை சற்று நல்ல நிறத்துடன் இருப்பதாக வருத்தப்பட்டாராம். அப்போது ராதையை அழைத்த கிருஷ்ணரின் தாய், ராதாவுக்கு வண்ணப்பொடிகளை தடவி அவரை சற்று கருப்பாக கண்ணன் முன் காட்டியதாக கதை கூறப்படுகிறது.

ஒரு முறை தட்சனுக்கு மகளாகப் பிறந்த சதிதேவி சிவனை கணவனாக அடைய விரும்பினாள். சுடுகாட்டில் வசிக்கும் சிவனுக்கு பெண்ணை தர மனமில்லாமல் வேறு வழியின்றி திருமணம் செய்து வைத்தான். ஒரு சமயம் சிவனுக்கு யக்ஞத்தில் பங்கு கொடுக்காமல் யாகம் செய்து அவமானப்படுத்திய தால், தாட்சாயிணி வேள்வி தீயில் விழுந்து உயிர் .நீத்தாள். பின்னர் பார்வதியாக அவதரித்தாள். சிவனையும் பார்வதியை மும் இணைக்க நினைத்த தேவர்கள் சிவன் கடும் தவத்திலிருக்கும் போது மன்மதனை அழைத்து மன்மத பாணம் விடுமாறு கூறினர். மன்மதன் விட்ட அம்பு சிவபெருமானை சீண்டியது. தனது தவத்தை கலைத்ததால் கோபம் கொண்ட சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். பின்னர் பார்வதி அவரை திருமணம் செய்தார்.
இதைத் தொடர்ந்து, தங்கள் இருவரையும் சேர்ப்பதற்காகவே எனது கணவர் மன்மதன் உதவி செய்தார். அவரை மீட்டு தாருங்கள் என்று மன்மதனின் மனைவி ரதி வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு சிவபெருமான் செவிசாய்த்து மீண்டும் மன்மதனை உயிர்த்தெழ செய்தார். இந்த நிகழ்வையொட்டியே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
வடஇந்தியாவில் 5 நாட்கள் ஹோலி
கொண்டாடப்படுகிறது.
பண்டிகையை தங்களது நண்பர்களோடும், உறவினர்களோடும் கொண்டாடி மகிழ்வர். மேலும் முகங்களில் கலர் பூசியும், கட்டி அணைத்தும் வாழ்த்து தெரிவிப்பார்கள். அவர்களுக்கு பல்வேறு வகை இனிப்புகளை வழங்கியும் கௌரவிப்பார்கள்.
வடஇந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும்.

அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் பல அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது. அப்போது ஹோலிகா தகனமாவதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாக குரல் எழுப்புவார்கள்.
தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு
வகைகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர்
பொடிகளை தூவி, மகிழ்ச்சியை
வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி
காற்றில் உயரப்பறந்து
தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மற்றும்
பிருந்தாவனத்தில் தன்னைவிட ராதை
சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாக
கண்ணன் எண்ணுகிறான். அவர்கள்
இருவரும் கோபியர்களுடன் பிருந்தாவனத்தில் விளையாடும்போது,
ராதையின் மீது கண்ணன் விளையாட்டாக
கலர் பொடிகளை பூசி மகிழ்கிறான்.
கண்ணனை ராதை செல்லமாக அடித்து
விளையாடுகிறாள். இதனை நினைவு
கூறும் விதமாக கணவன்-மனைவி
இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது
கணவனை தன்னிடம் உள்ள துணியால் மனைவி அடித்துக் கொண்டே இருப்பாள். கணவன் எவ்வளவு அடி வாங்குகிறானோ, அந்தளவுக்கு தன்மீது அதாவது மனைவி
பிரியமாக இருக்கிறாள் என்று கூறி
மகிழ்வதுண்டு. இவ்வாறாக ஹோலி
பண்டிகையை வெவ்வேறு மாநிலங்களில் மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.




