வியர்வை சிந்தவைக்கும் கோடை தக தக வெயில் மெட்ரோ ரயில் பயணத்திற்கு இலவச கூப்பன் இவைகளால் சென்னையில் மக்கள் மெட்ரோ ரயில் பயணத்தை அதிகளவில் விரும்பி பயணிக்கின்றனர். கடந்த 10 நாட்களில் 15.10 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் பணி மனை, பரங்கிமலை – எம்.ஜி.ஆர் சென்ட்ரல் நிலையங்கள் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் நாளுக்கு நாள் பயணியர் கூட்டம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக, கோடையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் சாலை பயணத்தை தவிர்த்து, குளு குளு மெட்ரோவில் பயணிக்க அதிக ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
கடந்த 12ம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரைஸ10 நாட்களில் 15.10 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். தினமும் சராசரியாக, 1.50 லட்சம் பேர் பயணித்து உள்ளனர்.
கடந்த தமிழ் புத்தாண்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணியர் அதிக அளவில் மெட்ரோவில் பயணித்துள்ளனர்.
மெட்ரோ ரயில்கள் நேரம் தவறாமல் இயக்கப்படுவதும் குளிர்சாதன வசதி இருப்பதும் இங்கு பராமரிக்கப்படும் துாய்மையும் பயணியரை கவர்ந்துள்ளதாக, மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரயிலில் பயணியர் வருகையை அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் பயணியருக்கு வழங்கப்படும் என நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த அறிவிப்பின்படி, இத்திட்டத்தில் கடந்த மார்ச்21 முதல் ஏப்20 வரை பயணியருக்கான மாதாந்திர அதிர்ஷ்ட குலுக்கல் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் பயணியர் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நடந்தது.
இதில் ஒவ்வொரு பரிசு பிரிவிலும், 10 பயணியர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு வராத பயணியர் பரிசு விபரம் குறித்து, அனைத்து மெட்ரோ நிலைய கட்டுப்பாட்டாளர்களையும் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






