
திருப்புகழ்க் கதைகள் பாகம் 319
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
வாரம் உற்ற – சுவாமி மலை
ஹிரண்யாட்சன்
இதற்கு முன்னர் தவத்தில் சிறந்தவரான கஸ்யப முனிவருக்கும், திதிக்கும் திருமணம் நடைபெற்றது. கஸ்யபர் தன் ஆசிரமத்தில் பகவானைக் குறித்து வேள்வி செய்து கொண்டிருந்தார். அந்நேரம் வேள்வி சாலைக்கு வந்த திதி, தன் விருப்பத்தை நிறைவேற்றுமாறு கணவரிடம் கூறினாள். அதற்கு அவர் இது பூதங்கள் மட்டுமே சஞ்சாரம் செய்யும் சந்தியா வந்தன நேரம், ஒரு முகூர்த்த காலம் மட்டும் நீ பொறுத்துக் கொள் என்று கூறினார். அதற்கு திதி மறுக்கவே தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றினார் கஸ்யபர். பின் மீண்டும் பகவானை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த திதி, சுவாமி, என்னை மன்னித்தருளுங்கள் தங்களின் சொற்களைக் கேளாமல் இவ்வாறு தவறாக நடந்து கொண்டேன் என்றாள். உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார் கஸ்யபர். என் கருவிலிருக்கும் சிசுவுக்கு எந்தவித ஆபத்தும் வராமல் இருக்க தாங்கள் தயவு காட்ட வேண்டும் எனக் கேட்டாள். திதியே! நான் எத்தனையோ முறை கூறியும் நீ காதில் போட்டுக் கொள்ளவில்லை. சந்தியா காலத்தில் உன் உதிரத்தில் சேர்ந்த கருவிலிருந்து இரண்டு பிள்ளைகள் பிறப்பார்கள் அவர்கள் அரக்ககுணம் உடையவர்களாக தர்ம விரோதமான காரியங்களில் ஈடுபட்டு மூவுலகையும், தேவர்களையும் துன்புறுத்துவார்கள். அப்போது பெருமாள் அவதாரம் எடுத்து அவர்களை வதம் செய்வார் என்றார் கஸ்யபர்.
சுதர்சனத்தை கையில் ஏந்திய பரந்தாமன் கையில் என் பிள்ளைகள் மரணமாவதில் எனக்கு ஒரு குறையும் இல்லை, எனினும் அந்தணராகிய உங்கள் சாபத்துக்கே நான் அஞ்சினேன் என்று அழுதாள். பிரியே, கவலை வேண்டாம். இப்போது நீ பரந்தாமனிடத்தும், சிவபெருமானிடத்தும், என்னிடத்திலும் கொண்ட பக்தியால் உன் பிள்ளைகளில் ஒருவனுக்குப் பிறக்கும் பையன் ஹரி பக்தியில் சிறந்தவனாக இருப்பான். அவன் மேலானவர்களுக்கும் மேலானவனாக இருந்து புகழ் பெறுவான் என்றார்.
இதைக் கேட்ட திதி தன் பிள்ளைவழிப் பேரனாவது ஹரி பக்தனாக இருக்கிறானே என சந்தோஷமடைந்தாள். கரு உருவாகி வளர்ந்தது. பிள்ளைகள் பிறந்தால் தேவர்களுக்கு இடையூறு ஏற்படுமே என்றெண்ணிய திதி அப்பிள்ளைகளை நூறு வருடங்கள் வயிற்றில் சுமந்தாள். அதனால் அந்தக் கருவின் ஒளி எங்கும் பறந்து விரிந்து சூரிய சந்திரனின் ஒளியை மங்க வைத்தது. நாலாத் திசையும் இருண்டன.
இதைக் கண்ட தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். பிரம்மன் அவர்களிடம் தேவர்களே, ஒரு நாள் என் மனத்தினால் தோற்றுவிக்கப்பட்ட என் புதல்வர்களான சனகாதி முனிவர்கள் நாராயணனை தரிசிக்கச் சென்றனர். அப்போது அவர் வாயிற்காப்பாளர்களாக ஜெய, விஜயர் இருந்தனர். நாராயணனை தரிசிக்க விடாமல் தடுத்த காரணத்திற்காக அவர்கள் முனிவர்களின் சாபத்திற்கு ஆளாகினர். தங்கள் தவறை உணர்ந்த ஜெய, விஜயர்கள் நாங்கள் தண்டனை அனுபவிக்கும் காலத்திலும் ஸ்ரீமந் நாராயணனையே நினைக்க வேண்டும் என்று வேண்டினர். இதை அனைத்தும் கவனித்துக் கொண்டிருந்த நாராயணன் முனிவர்கள் முன் தோன்றினார். முனிவர்களே, பக்தர்களாகிய உங்களுக்குச் செய்த அபசாரம் கண்டிக்கத்தக்கது. அது மட்டுமல்ல. என் ஊழியர்கள் அறியாமல் செய்த பிழைக்கு நான் பொறுப்பேற்கிறேன், அவர்கள் அதி சீக்கிரமே பூமியில் ஜனித்து சாபம் நீங்கி என் திருவடிகளை சரணடைய வேண்டும் என்றார்.
உடனே முனிவர்கள் இவர்கள் இருவரும் வெகுசீக்கிரமே அரக்கர்களாக பிறந்து உன்னை அடைவார்கள் என்றார். இவர்கள் தான் இப்போது திதியின் கருவில் இருக்கும் ஜெய, விஜயர்கள் என்று சொல்லி முடித்தனர். திதி நூறு வருடங்கள் சென்றதும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். அவர்கள் பூமியில் ஜனனம் ஆகும் போது பல கெட்ட சகுனங்கள் பூமியின் தோன்றின. முதலில் பிறந்தவன் ஹிரணிய கசிபு என்றும், இரண்டாவது பிறந்தவன் ஹிரண்யாட்சன் என்றும் பெயரிடப்பட்டனர். விரைவிலேயே அவர்கள் பூதாகாரமாக, மலை என வளர்ந்து நின்றனர். அவர்கள் செய்த அட்டூழியங்களைக் கண்டு மூன்று உலகமும் நடுங்கியது. இதற்கு காரணம் பிரம்மாவிடம் யாருக்கும் இல்லாத பராக்கிரமத்தைக் கேட்டுப் பெற்ற வரத்தின் விளைவே ஆகும்.
ஹிரண்யாட்சன் தேவர்களை ஓட ஓட விரட்டினான். மிகவும் துன்புறுத்தினான். இதனால் தேவர்கள் அனைவரும் காணாமல் போயினர். இவன் அவர்களை தேடி பாதாள லோகத்திற்கு செல்ல சமுத்திரத்தில் மூழ்கினான். சமுத்திர ராஜனான வருணனை யுத்தத்திற்கு அழைத்தான். ஹிரண்யாட்சனிடம் யுத்தம் செய்து பலன் எதுவும் இல்லை, பிரம்ம வரத்தால் பராக்கிரமம் கொண்ட இவனை ஜெயிக்க முடியாது என்பதை வருணன் உணர்ந்தான். “அசுர முதல்வனே, உன் பராக்கிரமத்தை நான் பாராட்டுகிறேன். தினவு எடுக்கும் உன் தோள்களுக்கு சிறந்த விருந்து தர ஸ்ரீ ஹரி ஒருவராலே முடியும். நீ அவரைத் தேடிச் சென்று உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்” என்று தந்திரமாக பதில் கூறினான்.
வருணன் சொன்னதைக் கேட்ட ஹிரண்யாட்சன் என்ன செய்தான் நாளை காணலாம்.