கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக ஹால் டிக்கெட் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு
ஹால் டிக்கெட் வழங்க மறுத்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க நேரிடும் எனவும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதியும் பத்தாம் வகுப்புக்கும் மே 6 ஆம் தேதியும் பிளஸ் 1 வகுப்புக்கும் மே 10-ஆம் தேதியும் அரசு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை அந்தந்த பள்ளிகளே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.இந்நிலையில் சில தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டண நிலுவை காரணமாக, சம்பந்தப்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாதவாறு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தராமல் நிறுத்தி வைப்பதாக புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்க பள்ளிகள் மறுக்கக்கூடாது. நுழைவுச் சீட்டு வழங்க மறுத்தால், சமந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளர்.






