4 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட சூலக்கல் கண்டுபிடிப்பு!

Published:

Stone - 2026

மானாமதுரை சின்னக்கண்ணனூர் கிராமத்தில் பில்லனேரி கண்மாய் பகுதியில் சேங்கை முனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் வழியில் 4 அடி உயரமுள்ள கல் உள்ளது.

இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின்படி பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்களான மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அந்தக்கல், பிற்கால பாண்டியர் காலத்தில் நிறுவப்பட்ட அரச முத்திரையுடன் கூடிய சூலக்கல் என்பதை கண்டறிந்தனர்.

மேலும் இதுபற்றி அவர்கள் கூறியதாவது, பொதுவாக சூலக்கல் பயன்பாடானது அரசர்கள் வழிபாட்டுத் தலங்களில் தினசரி வழிபாடு மேற்கொள்வதற்காக நிலங்களை வரி நீக்கி நிவந்தம் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

சிவன், காளி, அய்யனார் கோவிலுக்கு வழங்கும் தானம் நிலதானம். பெருமாள் கோவிலுக்கு வழங்கும் தானம் திருவிடையாட்டம். சமண பௌத்த பள்ளிகளுக்கு வழங்கும் தானம் பள்ளிச்சந்தம் என்றும் அழைக்கப்படும்.

மேலும் தானமாக வழங்கும் நான்கு திசைகளிலும் எல்லைக் கற்கள் நடப்பட்டு கோவில் நிலங்களாக பாதுகாக்கப்படும். சிவன் கோவில்களுக்கு வழங்கும் நிலங்களில் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்டு சூலக்கற்கள் நடப்படும்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

சின்னக்கண்ணனூரில் கண்டறியப்பட்ட சூலக்கல் 4 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டது. இந்த சூலக்கல்லில் ஒரு சூலம் புடைப்புச் சிற்பமாக இடம்பெற்றுள்ளது.

பாண்டியர்கால அரச முத்திரை இந்த திரிசூல புடைப்புச் சிற்பத்தின் வலதுபுரம் ஒரு மீனும், இடதுபுரம் ஒரு செண்டு கோலும், புடைப்புச் சிற்பமாக இடம்பெற்றுள்ளது.

கி.பி 1190 முதல் கி.பி 1310 வரையிலான பிற்கால பாண்டியர் ஆட்சிக் காலத்தில் இந்த சூலக்கல் நிறுவப்பட்டு இருக்கலாம்.

இதன் மூலம் இந்தப்பகுதி பிற்கால பாண்டியர் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது என்று அனுமானிக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்டு இந்த பாண்டிய மன்னனின் காலம் என்று கூறுவதற்கு கல்வெட்டு ஏதும் பொறிக்கப்படவில்லை.

முறையான தொல்லியல் அகழாய்வுக்கு உட்படுத்தினால் பாண்டியர்களின் வரலாற்றை பறைசாற்றும் தொல்லியல் எச்சங்கள் வெளிப்படலாம் என்று அவர்கள் கூறினார்கள்.

Related articles

Recent articles

spot_img