
சமீப காலமாக அதிகமாக ட்ரெண்டாகி வருவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான். எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் பெரும்பாலான முன்னணி கார் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், எலெக்ட்ரிக் வாகனம் வாங்க விரும்புவர்களுக்கு மற்றுமோர் செய்தி காத்திருக்கிறது
காற்று மாசுபாட்டை குறைக்கவும், கார்பன் உமிழ்வை முற்றிலுமாக தவிர்க்கவும் மாற்று எரிபொருள் மற்றும் பாரம்பரிய எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு கடந்த ஆண்டு முதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
உற்பத்தி நிலையில் இருந்தாலும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை மிகப்பெரிய அளவில் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரை, டூவீலர் முதல் சொகுசு கார்கள் வரை பல முன்னணி கார் தயாரிப்பாளர்களும், பலவிதமான வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் மாடல்களை வடிவமைத்து உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்கள் வருமான வரிச் சட்டம் 80EEB பிரிவின்படி வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம்.
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா பிரதேஷ், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் எலெக்ட்ரிக் மொபிலிட்டியை வரவேற்று, மேம்படுத்துவதற்கு தங்களுடைய பாலிசிகளை அறிவித்துள்ளது.
இதில் குறிப்பாக தில்லி, குஜராத், மேகாலயா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் எலெக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்களுக்கு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்கள் உற்பத்தி சார்ந்த ஊக்க சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
எப்படி இருந்தாலும் எலெக்ட்ரிக் வாகனம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் காத்திருக்கிறது. அதில் மிகவும் முக்கியமானது வருமான வரியில் இருந்து விலக்கு பெறுவது.
இந்திய அரசாங்கம் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக குறைத்தது மூலம் எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்குபவர்களுக்கு கணிசமான தொகை மிச்சமாகும். தற்பொழுது வருமான வரியில் கூடுதல் சலுகையைப் பெறலாம்.
இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி தனிப்பட்ட சொந்த பயன்பாட்டுக்கான பொருட்கள் மற்றும் சொகுசு பொருட்கள் ஆகிய அனைத்துக்கும் வரிச்சலுகைகள் இல்லை.
தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காகவே புதிதாக ஒரு பிரிவு வருமான வரி சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
80EEB சட்டத்தின்படி எலெக்ட்ரிக் வாகனங்களை கடனில் வாங்குபவர்கள், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வட்டித் தொகையை விலக்காக பெறலாம்.
அதாவது நீங்கள் வாகன கடனுக்கு செலுத்தும் வட்டித் தொகையை, அதிகபட்சமாக ₹1,50,000 வரை மொத்த வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ளலாம். இந்த விதி இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இரண்டுக்குமே பொருந்தும்.
வருமான வரிச்சட்டம் 80EEB பிரிவின் படி இந்த வரி சலுகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?
எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும் அனைவருக்குமே இந்த பிரிவின்படி வருமான வரியில் இருந்து விலக்கு பெற முடியாது. இதற்கென்று ஒரு சில நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விலக்கு, முதல் முறையாக எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனத்தை வைத்திருந்தால் வருமான வரி விலக்கு பெற முடியாது.
வாகனக் கடன் மூலம் எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்குபவராக இருக்க வேண்டும். மொத்தமாக பணம் கொடுத்து வாகனம் வாங்குபவர்களுக்கு இந்த விலக்கு பொருந்தாது.
எலெக்ட்ரிக் வாகனத்தை வங்கிக் கடனில் வாங்கினாலும், அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறுவதன் மூலம் வாகனத்தை வாங்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் EV வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு பெற முடியாது.
வாகனம் தனி நபர்களின் பெயரில் இருக்க வேண்டும், அதாவது தனி நபருக்கு சொந்தமான வாகனமாக இருக்க வேண்டும். வணிகம் அல்லது கூட்டுத்தொழில் பெயரில் வாகனம் வாங்குபவர்களுக்கு இந்த பிரிவின்படி விலக்கு கிடையாது.
இந்த பிரிவு சமீபத்தில்தான் அமல்படுத்தப்பட்டிருந்தது என்றாலும் 2020-2021 நிதி ஆண்டில் இருந்து இந்த சலுகையை பெறலாம்.
அதாவது நீங்கள் 2020 ஏப்ரல் முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை கடனில் வாங்கி இருந்தால், கடனுக்கு நீங்கள் செலுத்திய வட்டியை வருமான வரி விலக்காகக் கோரலாம்.
இந்த வரிச்சலுகை 31 மார்ச் 2023 வரை எலெக்ட்ரிக் வாகனம் கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.