கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் அருங்குணம் அருகே கெடிலன் ஆற்றில் குளித்த 6 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் ஏ.குச்சிப்பாளையம் அருகாமையில் கெடிலம் ஆறு உள்ளது. இப்பகுதி மக்கள் இந்த ஆற்றில் குளிப்பது வழக்கம். அந்த வகையில் அதன்படி இன்று காலை அதே பகுதியை சேர்ந்த 6 சிறுமிகள் உள்பட சுமிதா (16), பிரியா(17), மோனிகா(15), சங்கீதா(17), பிரியதர்ஷினி(14), கவிதா(12), மற்றும் இளம்பெண் நவநீதா(9) தடுப்பணையில் குளிக்க சென்றனர். ஆற்றில் உள்ள தடுப்பணையில் குளித்த போது 7 பேர் நீரில் மூழ்கினர்.
தடுப்பணையில் ஏற்பட்ட சூழலில் 2 பேர் சிக்கிய நிலையில் அவர்களை காப்பாற்ற முயன்ற 5 பேர் நீரில் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த அக்கம் பக்கத்தினர். ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டனர். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஏ.குச்சிப்பாளையம் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றன.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மருத்துவமனை வந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.25,000 வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணையில் மூழ்கி 7 பேர் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மண்ணின் தன்மை, குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் ஏற்பட்டது குறித்தும் விசாரணை நடத்தப்படும் எனவும் கூறினார்.
கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் இன்று 12.45 மணியளவில் குளிக்கச் சென்ற சங்கவி ( 18) , பிரியா (19) , மோனிஷா ( 16), நவநீதம் (20) , சுமிதா ( 18), , காவியா (எ) திவ்யதர்ஷிணி ( 10), மற்றும் பிரியதர்ஷிணி (15), த/பெ. ராஜ்குரு ஆகிய 7 பேர் குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால், அந்தப் பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தோரில் ஐந்து பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, மிகவும் வேதனை அடைந்தேன். உயிரழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்த ஏழுபேரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.







