முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்ததாக பா.ஜ.க நிர்வாகிகளான நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிந்தால் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பா.ஜ.க மேலிடம் அதிரடியாக நீக்கியநிலையில் பாஜக வின் அதிரடி நடவடிக்கைக்கு சவுதி, பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை பேசினார். இத தொடர்பாக மஹாராஷ்டிரா போலீஸ் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே பா.ஜ.க வின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிந்தால் சமூக வலைதளத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு பின்னர் அதனை நீக்கியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிந்தாலின் கருத்துகளுக்கு பல இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
கத்தார், குவைத் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பிய கத்தார் அரசு, ‛இந்தியாவில் ஆளும்கட்சியைச் சேர்ந்த சிலர், இஸ்லாமிய மதம் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக, இந்திய தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக’ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கத்தாரை தொடர்ந்து ஈரான் மற்றும் குவைத் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சம்பந்தப்பட்ட நாடுகளில் இயங்கி வரும் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக, நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிந்தாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பா.ஜ.க மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பா.ஜ.க அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி எனவும், எந்த மதத்தை அவமதிப்பதையும் ஏற்க முடியாது எனவும் பா.ஜ.க சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜ.க மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கைக்கு சவுதி, பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் உட்பட பல்வேறு அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.





