
திமுக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம் தெரிவித்து அவரை கைது செய்ய வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளார் .
கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவை சேர்ந்த ஆ.ராசா இந்துக்களை தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இதற்கு தொடர்ந்து இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கக்கூடிய இராஜகோபுரம் அமைந்திருக்கும் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் உள்ள மணவாள மாமுனிகள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் தொடர்ந்து இந்துக்களை திமுக வின் கொள்கை பரப்புச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இழிவு படுத்தி பேசியதை கண்டித்தும், ஆ.ராசாவை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் ஆ.ராசா இந்துக்களை விமர்சித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது அவரை தமிழக முதலமைச்சர் கட்சியிலிருந்து நீக்கியும் கைது செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.





