
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் தீவிர கண்காணிக்கப்படுகின்றனர். தமிழகத்திலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சர்வதேச விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு இச்சோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் குறிப்பிட்டு உள்ளது.
அதன்படி தமிழகத்திலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வெளிநாட்டு விமானங்கள் வந்திறங்கும் அனைத்து விமான நிலையங்களிலும் இன்று முதல் கொரோனா பரிசோதனை மீண்டும் தொடங்கியது. சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில், சர்வதேச முனையத்தில் வருகைப் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை சுகாதாரத் துறையினர் தொடங்கியுள்ளனர்.
இதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம் பயணிகள் வருகை பகுதியில், செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை சிறப்பு முகாம்களை அமைத்து உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த பரிசோதனை நடக்கிறது. இந்த நாடுகளில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாமல், இணைப்பு விமானங்களில் பயணிகள் மாறி வருவதால், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளும் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு சதவீதம் பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடக்கிறது. அந்த இரண்டு சதவீதம் பயணிகள் யார்? என்பதை அந்தந்த விமான நிறுவனங்களே முடிவு செய்து அறிவிக்கின்றன.
விமானங்களில் வரும்போது சோர்வாக, இருமல் சளி மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் போன்றவைகளுடன் இருக்கும் பயணிகளை, இவ்வாறு இரண்டு சதவீத பரிசோதனைக்கு உட்பட்ட பயணிகளாக, தேர்வு செய்கின்றனர். குறிப்பாக வெளி நாட்டவர்களுக்கு, இந்த பரிசோதனைகள் அதிகமாக நடக்கின்றன. இவர்கள் தவிர மற்ற பயணிகள் விருப்பப்பட்டால் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளான பயணிகளுக்கு, கொரோனா வைரஸ் பரிசோதனை கிடையாது.
ஆனால் அவர்களில் யாருக்காவது, இருமல், சளித்தொல்லை போன்றவைகள் அதிகமாக இருந்தால், அவர்களுக்கும் பரிசோதனை நடக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பரிசோதனைக்கு உட்படும் பயணிகள் சிறிது நேரத்தில் தங்களுடைய பரிசோதனை முடிவுகளை வாங்கிவிட்டு செல்லலாம். அந்தப் பரிசோதனை முடிவில், அவர்களுக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
அதோடு அந்த பயணிகள் மருத்துவமனைகள் அல்லது அவர்களின் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





