
சபரிமலை ஐயப்பனுக்கு நாளை மறுநாள் மண்டல பூஜை விழா நடைபெறுகிறது.மண்டல பூஜையை முன்னிட்டு நாளை ஐய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை வழிபாடு நடக்கிறது.
சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் அதிக அளவில் வரத் தொடங்கினர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி என்ற நிலையிலும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 38 நாட்களில் 26 லட்சத்து 476 பக்தர்கள் தரிசனம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், மண்டல பூஜையை முன்னிட்டு நாளை (26-ந் தேதி) ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை வழிபாடு நடக்கிறது. இதனை காண பக்தர்கள் இன்றே சபரிமலையில் குவிந்து வருகிறார்கள். முக்கிய திருவிழாவான மண்டல பூஜை, நாளை மறுநாள் (27-ந் தேதி) நடைபெற உள்ளது. அன்றைய தினம் தரிசனத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிச 27 இல் மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். 450 பவுன் எடையுள்ள இந்த தங்க அங்கி ஆரன்முளாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையின் போது இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து டிச23இல் புறப்பட்டது. தங்க அங்கி ஊர்வலத்துக்கு 65 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஊர்வலம் பல்வேறு கோவில்களுக்கும் சென்று நாளை 26-ந் தேதி மதியம் பம்பை சென்றடைகிறது. அங்கு கணபதி கோவிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்று விட்டு அன்று மாலை சபரிமலை சன்னிதானம் சென்றடைகிறது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் 18-ம் படி வழியாக கருவறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. 27-ந் தேதி சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடக்கிறது. அப்போது ஐயப்பன் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகளும் சபரிமலையில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.





