
பொங்கல் பரிசில் கரும்பை வழங்க மறுத்து, கரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்க முயற்சித்த திமுக அரசின் செயல்பாட்டை எதிர்த்து, தமிழக பாஜக இந்த விஷயத்தை கையில் எடுத்ததும், ஆளும் அரசு அடங்கிப்போய் நேற்றைய தினம் பபொங்கல் பரிசில் கரும்பையும் சேர்த்து வழங்க உத்தரவிட்டது . இப்போது விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் விஷயத்திலும் திமுக முட்டுக்கட்டை போட்டுள்ளதை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில், ஏழை எளிய மக்கள் புத்தாடைகள் அணிய வேண்டும் என்பதற்காகவும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காகவும் மறைந்த முன்னாள் முதல்வர் திரு. எம்.ஜி. ராமசந்திரன் அவர்களால் 1983 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம்.
தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும், இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, முந்தைய ஆட்சிக் காலங்களில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொன்றையும் கிடப்பில் போடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இந்தத் திறனற்ற திமுக அரசு.வரும் பபொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்க நினைத்த திமுக, தற்போது இலவச வேட்டி சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களை வஞ்சிக்க நினைக்கிறது.
தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில், நெசவாளப் பெருமக்கள் வசிக்கிறார்கள். ஆயிரத்துக்கும் அதிகமான கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே அதிகமான அளவில் தனியாரிடம் கொள்முதல் செய்து, நெசவாளப் பெருமக்கள் வயிற்றில் அடித்த இந்த திமுக அரசு, அடுத்த ஆண்டு இவ்வாறு நடக்காது என்று கூறியிருந்த நிலையில், இந்த ஆண்டும், பெருமளவில் தனியாரிடம் கொள்முதல் செய்வதற்கு திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, மூன்று மாதங்கள் தாமதமாக, அக்டோபர் மாதம்தான் அரசாணை வெளியானது. அத்துடன், அரசு வழங்கிய நூல், தரம் குறைவாக இருந்ததால், உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் நெசவாளப் பெருமக்கள்.
வழக்கமாக, டிசம்பர் மாத இறுதியில், 80 சதவீத அளவுக்கு, விலையில்லா வேட்டி சேலை உற்பத்திப் பணிகள் முடிந்திருக்கும். ஆனால் தற்போது சேலை உற்பத்தி 42 சதவீதமும், வேட்டி உற்பத்தி 29 சதவீதமும் மட்டுமே முடிவடைந்துள்ளதாக நெசவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மூன்று மாதங்கள் கால தாமதமாக, விலையில்லா வேட்டி சேலை உற்பத்திக்கான உத்தரவு வழங்கப்பட்டதாலும், தரமற்ற நூல் வழங்கி, உற்பத்தியை மேலும் தாமதப்படுத்தியதாலும், பபொங்கலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், மொத்த உற்பத்தியையும் நிறைவேற்ற முடியாது என்று அச்சப்படுகின்றனர் நெசவாளர்கள். மொத்த உற்பத்திக்கான தரமான நூலை, வெறும் ஒரு மாதம் முன்பாக, கடந்த நவம்பர் மாதம்தான் வழங்கியிருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு.
ஏழை எளிய மக்களும், நெசவாளப் பெருமக்களும் பலன் பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம், திமுகவுக்கு ஆதரவான தனியார் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும்படி மடைமாற்றம் செய்யப்படுகிறதோ என்று எண்ணும்படி நடந்து கொள்கிறது இந்தத் திறனற்ற திமுக அரசு.
ஒரு சேலைக்கு 200 ரூபாயும் ஒரு வேட்டிக்கு 75 ரூபாயும் பெற்றுக்கொண்டு நெசவு செய்யும் தொழிலாளர்களிடமும் 10% கமிஷன் கேட்டவர்தான் திமுகவின் கைத்தறி அமைச்சர் திரு. காந்தி அவர்கள்.
வேண்டுமென்றே நூல் கொள்முதல் உத்தரவைத் தாமதப்படுத்தி, தரமற்ற நூல் வழங்கி அதன் மூலம் உற்பத்தியையும் தாமதப்படுத்தி, இறுதியில், இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டதாக அறிவித்த ரூ. 487.92 கோடியை வெளிமாநிலத்து தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருந்தால், அதைப் பார்த்துக் கொண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சி சும்மா இருக்காது என்பதை மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.