
பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று மத்திய அரசின் நடவடிக்கை சரியானதே என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. புழக்கத்தில் உள்ள 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், பழைய நோட்டுகள் செல்லாது எனவும் மத்திய அரசு 2016 நவ8ல் ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. நாட்டில் உள்ள கள்ளப் பணப் புழக்கத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்களை பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது நீண்டகாலமாக விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், இந்த மனுக்கள் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் பி.ஆர்.கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன், பி.வி. நாகரத்னா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பு …
மத்திய அரசு ரிசர்வ் வங்கி இடையில் 6 மாத காலமாக நடந்த ஆலோசனைப்படியே இந்த பணமதிப்பிழப்பு நடந்துள்ளது. எந்தவொரு விதிமுறை மீறலும் இல்லை. அரசு எடுக்கும் நடவடிக்கையை கட்டுப்படுத்த நீதிமன்றம் விரும்பவில்லை, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. அரசின் பணமதிப்பிழப்பு செல்லும்… என்று 5ல் 4 பேர் என பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தனர் .
நாகரத்னா என்ற நீதிபதி மட்டும், ஆர்பிஐ விதிமுறைப்படி இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மாற்றுக் கருத்தைத் தெரிவித்தார்.