
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் நகரம், 12 நாள்களில் 5.4 செ.மீ. அளவுக்கு பூமிக்குள் புதைந்திருப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் பத்ரிநாத், ஹேமகுண்ட் சாஹிப் ஆகிய முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கும் அவுலி பனிச்சறுக்கு சுற்றுலா தலத்துக்கும் வாயிலாக விளங்கும் ஜோஷிமட் நகரின் நிலப்பகுதி தாழ்ந்து வருவதால், வீடுகள், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அங்கு வாழும் மக்கள் பெரும் அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ளனா். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணியையும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், காா்டோசாட்-2எஸ் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களின் மூலம் இஸ்ரோவின் தேசிய தொலையுணா்வு மையம் (என்ஆா்எஸ்சி) முதல்கட்ட ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜோஷிமட்டில் 2022, ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில், நிலப்பகுதி 8.9 செ.மீ. அளவுக்கு புதைந்தது. ஆனால், 2022, டிசம்பா் 27 முதல் 2023, ஜனவரி 8 வரை 5.4 செ.மீ. அளவுக்கு புதைந்துள்ளது.
இந்த 12 நாள்களில் நிலப்பகுதி புதையும் தீவிரம் அதிகரித்துள்ளது. புதையும் நிலப்பரப்பும் அதிகரித்துள்ளது. ஜோஷிமட் நகரின் மத்திய பகுதியில் இது நிகழ்ந்துள்ளது. 2,180 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அவுலியில் புதைவின் மையம் உள்ளது என்று இஸ்ரோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜோஷிமட் நகரில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். இதுவரை 169 குடும்பங்களைச் சோ்ந்த 589 போ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இடைக்கால நிவாரணமாக, இதுவரை 42 குடும்பங்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஜோஷிமட்டில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு மின்சாரம், குடிநீா் கட்டணங்களை தள்ளுபடி செய்ய முதல்வா் புஷ்கா் சிங் தாமி தலைமையிலான மாநில அமைச்சரவை வெள்ளிக்கிழமை முடிவு செய்தது.
வங்கிக் கடன் தவணைகளை செலுத்த ஓராண்டுக்கு விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜோஷிமட் போல இதர மலை நகரங்களிலும் தாங்கு திறன் ஆய்வை மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





