
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் முடிந்து கோடை காலம் துவங்கியுள்ள நேரத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்கும் நேரத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் காய்ச்சல்கள் பரவுவது வழக்கம் தான். அதன்படி தமிழகத்தில் தற்போது மீண்டும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவிவரும் இந்த வைரஸ் காய்ச்சலால் பலரும் அவதி அடைந்து வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் அதிகாலையில் குளிரும் தொடர்ந்து குளிர்ந்த காற்றும் வீசுவதால் பலருக்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த காய்ச்சலால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வேகமாக பரவும் இந்த காய்ச்சலால் நான்கு நாட்களுக்கு அதீத காய்ச்சல் தொண்டை வலி, இருமல், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் பாடாய்படுத்துடுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதே இந்தக் காய்ச்சல் வேகமாக பரவுவதற்கு காரணம் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பருவகாலங்களில் வழக்கமாக பரவும் வைரஸ் தோற்று என்பதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.





