
நீதிமன்ற உத்தரவு என கோவில்கள் இடிப்பு தொடர்கிறது. இது பக்தர்களின் மனங்களை புண்படுத்துகிறது என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் சி.சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை
கோவில் என்பது தனிநபர் சொத்து இல்லை. பக்தர்களின் வழிபடும் இடம். அதனை முறைப்படுத்த தமிழக அரசு கவனம் கொடுக்க வேண்டும்.
அனுமதி பெறாத, சட்டவிரோத சர்ச் மசூதி தர்கா மற்றும் மாதா சிலைகள் இருக்கின்றன. நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் அப்புறப்படுத்த அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
அதுபோல தெருவுக்கு தெரு தலைவர்கள் சிலை ஆக்கிரமிப்பு இடத்தில் தான் இருக்கிறது. அது குறித்து விவரம் சென்னை உயர்நீதிமன்றம் ஆறு மாதத்தில் தர உத்திரவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எந்த முன்னேற்றமும் இருப்பதாக தெரியவில்லை. அது தற்போது அதிகமாகியும் வருகிறது.
ஆனால் கொஞ்சமும் தயக்கமின்றி கோவில்களை அதிகாரிகள், போலீஸ் துணைகொண்டு கேவலமாக இடித்து தள்ளுகிறார்கள். இதுவே வருமானம் வரக்கூடிய தனியார் கோவில் என்றால் இந்து சமய அறநிலையத் துறை நாக்கில் எச்சில் ஊற அதனை விழுங்க ஓடோடி வருகிறது.
ஆனால் கோவிலை இடிக்கும் போது உரிய சடங்குகளோ தெய்வ விக்கிரகங்கள் பாலாலயமாக அமைக்கவோ முன்வருவதில்லை.
ஆக்கிரமிப்பு உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்குக்கூட முறையான வழிகாட்டுதல் தந்து மாற்று இடம் தந்து இழப்பீடு வழங்குகிறது அரசு. ஆனால் இந்து கோவில் வழிபாட்டு இடம் என்றால் கேட்பாரில்லை என்று நினைக்கிறது. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இனி வரும் காலங்களில் இதுபோன்று நடவாமல் நாகரிகமான, நியாயமான முறையில் கோவில் இடமாற்றமானது நடைபெற வேண்டும்.
வழிபாடு நடைபெறும் இடம் என்பது இறைவன் வாழும் இல்லம். அதனை தனது ஆட்சி அதிகாரத்தால் அசிங்கப்படுத்த நினைப்பது, அப்படி நடைபெறுவதை கண்டும் காணாமல் இருப்பது தெய்வ குத்தமாகும். எனவே உரிய முறையில் அதற்குரிய மாற்று செயல்பாட்டை வகுத்து அப்பகுதி மக்கள் கோரிக்கை எற்று செயல்படுத்த இந்து முன்னணி தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறது.