மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்த அழகர்..

Published:

500x300 1876897 kalala - 2026
#image_title

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்தார் கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடக்கிறது நாளை காலை 6 மணிக்கு மோகன அவதார கோலத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார் 8-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். 9-ந்தேதி காலை கள்ளழகர் இருப்பிடம் போய் சேருகிறார்.

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நேற்று காலை நடந்தது. இதற்காக கடந்த 3-ந்தேதி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு பெருமாள் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ளிட்ட இடங்களை கடந்து நேற்று முன்தினம் (4-ந்தேதி) மூன்று மாவடிக்கு வந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நடந்தது.

இதில் பல்லாயிரக்கணக்கானோர் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். பின்பு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு நள்ளிரவு 12 மணியளவில் திருமஞ்சனமாகி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து நேற்று அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் அருகில் ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அங்கிருந்து அதிகாலை 3 மணி அளவில் தங்க குதிரையில் அமர்ந்தபடி வைகை ஆற்றுக்கு வந்தார். பின்னர் அதிகாலை 5.52 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். இதனை காண 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். சுமார் ஒரு மணி நேரம் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதன் பின்னர் மதியம் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர். இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு இன்று காலை திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஏகாந்த சேவை, பக்தி உலாத்துதல் நடந்தன. அதனைத் தொடர்ந்து கள்ளழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் சர்க்கரை தீபம் எடுத்து வழிபட்டனர். பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் தேனூர் மண்டபத்தை வந்தடைந்தார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மாலை 3.30 மணியளவில் அனுமன் கோவிலில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து வழிபாடு நடத்துகின்றனர். இரவில் கள்ளழகர் மீண்டும் ராமராயர் மண்டகப்படிக்கு வருகிறார்.

அங்கு இரவு 11 மணி முதல் நாளை(7-ந்தேதி) காலை வரை விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவ தாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகன அவதாரம் ஆகிய திருக்கோலங்களில் அழகர் காட்சி அளிக்கிறார்.

நாளை காலை 6 மணிக்கு மோகன அவதார கோலத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்ட பத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

நாளை இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி 8-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அதே அதே கோலத்தில் கருப்பண சாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 9-ந்தேதி காலை இருப்பிடம் போய் சேருகிறார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img