
திருச்செந்தூரில் வேல் குத்தி வந்த பத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி, ரவுடியிசத்தில் ஈடுபடும் அறநிலையத்துறை பணியாளர்களுக்கு இந்துமுன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத் தலைவர் வி. பி. ஜெயக்குமார் வெளியிட்டுள்ள் அறிக்கை:
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலுக்கு விரதமிருந்து வேல் குத்தி வந்த பக்தரை திருக்கோவிலில் பணியாற்றும் தனியார் பாதுகாப்பு அலுவலர்கள் நெஞ்சை பிடித்து தள்ளிவிட்ட வீடியோ பதிவுகள் நேற்று சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்குள் எத்தகைய ரவுடியிசத்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே கண்கண்ட உதாரணமாகும். பக்தர்களுக்கு தான் கோவிலே தவிர சம்பளத்திற்கு பணியாற்றுபவர்களுக்கு அல்ல. திருச்செந்தூர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்குடம் எடுத்து வந்த பக்தர்களை உள்ளே அனுமதிக்காததால் பக்தர்கள் வேதனையோடு பிரகாரத்தில் பாலை கொட்டிச் சென்ற சம்பவம் முடிந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே வேல் குத்தி வந்த பக்தர்களை ரவுடிகள் போல் தாக்கி தள்ளுவது வேதனைக்குரிய செயலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அராஜக செயலை இந்துமுன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது
திருச்செந்தூரில் பக்தர்கள் அனைவரும் மேல் சட்டையை கழற்றி தரிசனம் செய்ய வருவது திருக்கோவிலில் மரபு. ஆனால் இந்த மரபுகளை தகர்த்து அங்கு பணியாற்றும் தனியார் செக்யூரிட்டிகள் மட்டும் மேலாடை அணிந்திருப்பது கோவில் மரபுகளை மீறிய செயலாகும். குருவாயூர் சபரிமலை போன்ற கோவில்களில் கோவிலுக்குள் பணியாற்றும் காவலர்கள் கூட மேல் சட்டை அணிவதில்லை. திருச்செந்தூர் கோவிலில் மரபுகளை மீறி பணியாற்றும் தனியார் காவலர்கள் மேல் சட்டை அணிந்து இருப்பதால் அவர்களுக்கு ஏதோ தங்கள் தான் கோவிலின் உரிமையாளர் என்பது போல நினைப்போடு அதிகாரம் செய்து வருகின்றனர். இதுபோல் இங்கு பணியாற்றும் தனியார் செக்யூரிட்டிகள் அடிக்கடி அடாவடித்தனமாக நடந்து கொள்வதாக பக்தர்கள் பலர் புகார் தெரிவிக்கின்றனர்.
திருச்செந்தூரில் வேல் குத்தி வந்த பக்தரை தள்ளிவிட்டு தாக்கிய செக்யூரிட்டி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும் . காவடி எடுத்து , வேல் குத்தி, பால்குடம் சுமந்து, பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு என தனியாக விரைவு தரிசன வரிசையை திருக்கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்
திருச்செந்தூர் திருக்கோவிலில் அப்பாவி பக்தர்கள் கோவில் நிர்வாகத்தால் தொடர்ந்து தாக்கப்படும் ரவுடியிசத்தை சம்பவத்தை இந்துமுன்னணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது பக்தர்கள் தாக்கப்படும் செயல் தொடர்ந்தால் இந்துமுன்னணி சார்பில் திருக்கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி எச்சரிக்கிறது.