
- சிறுதெய்வ பெருந்தெய்வ வழிபாடுகள் இருந்த போது இங்கே சண்டையில்லை!
- பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள்
- புதிதாக வெளியில் இருந்து வந்த மதங்களால் தான் பிரச்னை உருவானது!
- பத்தாயிரம் வருட சனாதன தர்மத்தின் உட்சநட்சத்திரம் வள்ளலார்!
- நானும் வள்ளலாரின் பக்தன் தான்! : ஆளுநர் ரவி
வெளியில் இருந்து பாரதத்துக்குள் வந்த மதங்களால் தான் இங்கே பிரச்சனை உருவானது. சிறு தெய்வ பெரு தெய்வ வழிபாடுகள் இருந்த வரையில் மக்களிடம் எந்த சண்டை சச்சரவும் இருந்ததில்லை, என்று வள்ளலாரின் 200 வது ஆண்டு விழாவில் தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி பேசினார்.
வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவருட்பிரகாச வள்ளலார் 200வது ஜெயந்தி விழாவில் தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
“சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்தவன். வள்ளலாரின் நூல்களையும் படித்துள்ளேன். அப்போது அது எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. பத்தாயிரம் வருடம் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்துள்ளனர்.
“அடிப்படை உண்மை என்பது “ஒரு ஈஸ்வரன், அவன் படைத்தவையான மனிதன், விலங்குகள், செடி கொடி என அனைத்தும் ஒரு குடும்பமே! இங்குள்ள நூற்றுக்கணக்கான மக்கள் உடை, தோற்றம் என வெவ்வேறாக உள்ளன. ஆனால் அனைத்தையும் தாண்டி உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பதுதான் சனாதன தர்மம்.
“சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்தான் இருப்பார்கள். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்னும் வள்ளலாரின் வரிகள் சனாதன தர்மத்தின் எதிரொலியே!
“200 ஆண்டுகளுக்கு முன் காரிருளை நீக்க வந்த ஜோதிதான் வள்ளலார். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலுக்கு நமது நாடு உள்ளான போது தோன்றியவர் வள்ளலார். நமது பாரதம் சனாதன தர்மம் நிறைந்தது.

“ஆயிரக்கணக்கான மார்க்கங்கள் இருந்த போதும் புதியதாக வெளிநாட்டிலிருந்து வந்த வழிபாட்டு முறையால் நமது அடையாளம் மறைந்து போனது. இந்தியப் பண்பாட்டில் சிறு தெய்வம், பெரும் தெய்வ வழிபாடுகள் இருந்தன. ஆனால், ஒருவரும் சண்டையிட்டுக் கொண்டதில்லை.
“வெளியில் இருந்து புதியதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் பிரச்னை உருவானது. பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள்.
ஆன்மீகத்தில் உயர்ந்த நாடு பாரத நாடு. நமது நாட்டின் பிரதமர் பேசுவதை உலகத் தலைவர்கள் கவனித்துக் கொண்டுள்ளனர். இந்தியா வல்லரசாகி உலகத்தின் தலைமையை ஏற்கும். இந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்லும் போது யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் வார்த்தையை ஏற்போம்.
வள்ளலார் சனாதனத்தைப் பற்றி தெளிவாகத் தெரிவித்துள்ளார். ஆனால் சில வேண்டுமென்றே தவறாக தெரிவிக்கின்றனர். நானும் வள்ளலாரின் பக்தர் தான் வள்ளலாரின் கொள்கையை உலகம் முழுவதும் பரப்புவோம்” என்று பேசினார் ரவீந்திர நாராயண் ரவி.
முன்னதாக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி புவனகிரியை அடுத்த மருதூர் கிராமத்தில் உள்ள வள்ளலார் அவதரித்த இல்லம், கருங்குழி கிராமத்தில் வள்ளலார் தண்ணீரில் விளக்கு எரித்த இல்லம், மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள வள்ளலார் சித்தி அடைந்த சித்தி வளாகம், வடலூரில் உள்ள அணையா அடுப்பாக மக்களுக்கு உணவு அளித்து வரும் தர்ம சாலை, சத்திய ஞான சபை உள்ளிட்ட பகுதிகளில் தனது மனைவியுடன் சென்று தரிசித்தார்.
இந்தப் படங்களை ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். அவை…
ஆளுநர் ரவி அவர்கள், மிகச்சிறந்த புனிதரும் கவிஞருமான வள்ளலார் அவர்களின் பிறந்த இடமான மருதூரில் அவருக்கு மரியாதை செலுத்தி உலகளாவிய அன்பு, தொண்டு, கருணை ஆகியவற்றின் நித்திய போதனைகளை நினைவுகூர்ந்தார்.
ஆளுநர் ரவி அவர்கள், வள்ளலார் கருங்குழி கிராமத்தில் வாழ்ந்த இடத்தைப் பார்வையிட்டார்.
ஆளுநர் ரவி அவர்கள், மேட்டுக்குப்பத்தில் உள்ள வள்ளலார் சித்தி அடைந்த இடத்தை பார்வையிட்டார்.