
திமுக., முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு குடும்பத்தினர் 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளனர். அவர்கள் அனைவரையும் நீதிமன்றக் கூண்டில் ஏற்றுவோம்; இது திமுக.,வின் மூன்றாம் தலைமுறை மற்றும் முதல் தலைமுறை என தலைமுறையினருக்கு இடையேயான யுத்தம் என தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறினார்.
அப்போது அவர், ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. டி.ஆர்.பாலு மீது நாங்கள் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் 2014-ம் ஆண்டு கலைஞரின் மகன் அழகிரி மதுரையில் தெரிவித்திருக்கிறார். அவர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. டி.ஆர் பாலு மட்டுமல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களும் சொத்து குவித்திருக்கிறார்கள். அதனால் அவரின் குடும்பத்தினர் அனைவரும் நீதிமன்றம் வரவேண்டும் என சம்மன் அனுப்ப முடிவு செய்திருக்கிறோம்..
தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்கும் இடையே நடக்கும் போர் இது. மூன்றாம் தலைமுறையிடம் அதிகார பலம், பண பலம், படைபலம் என எல்லாம் இருக்கிறது. அதனால் முதல் தலைமுறை கொஞ்சம் தட்டுத் தடுமாறிதான் வெல்லும்.. – என்று கூறினார்.
கடந்த ஏப்.14ல் ‛டிஎம்கே பைல்ஸ்’ என்ற பெயரில் திமுக.,வினரின் சொத்துப் பட்டியல் ஒன்றை வெளியிட்டார். அதில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக., எம்.பி.யுமான டி.ஆர்.பாலு குறித்த தகவலும் இருந்தது. இதனையடுத்து டி.ஆர்., பாலு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஜூலை 14 இன்று விசாரணைக்கு வந்த போது, விசாரணைக்கு பாஜக., தலைவர் அண்ணாமலை ஆஜரானார். விசாரணைக்கு பிறகு வழக்கு ஆகஸ்டு மாதம் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
திமுக., எம்பி., டிஆர் பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் குவித்துள்ள சொத்துக்களைக் குறித்து, #DMKFiles பகுதி 1 மூலம் அம்பலப்படுத்தியதற்காக அவர் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக, சைதாப்பேட்டை பெருநகர 17வது மாஜிஸ்திரேட் முன்பு இன்று ஆஜரானார் அண்ணாமலை.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, நமது நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கின் போது, ஏற்கெனவே அம்பலப்படுத்தப் பட்டதையும் தாண்டிய உண்மைகள் வெளிப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
‛டிஎம்கே பைல்ஸ்’வெளியிட்ட பிறகு ஆளுங்கட்சியினர் கோபத்தில் உள்ளனர். முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் பல அவதூறு வழக்குகளை தொடர்ந்தனர். பாஜக.,வின் ஊழலுக்கு எதிரான போராட்டம அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. வாய்ப்பேச்சு, அறிக்கை என்று இல்லாமல் நீதிமன்றத்தில் நேரில் சந்திக்கிறோம்… என்று குறிப்பிட்டார்.
டி.ஆர்.பாலு தாக்கல் செய்த மனுவில் அவரது சொத்துகள் தொடர்பான பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. பாலு 2004 -2009 ல் ஊழல் செய்ததால் தான், அதற்கு பிறகு மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. கருணாநிதி மகன் அழகிரி 2014 ஏப்ரலில் மதுரையில் பேட்டியளித்த போது, பாலு ஊழல் செய்தது குறித்து பேட்டி அளித்தார். அதில் நான் சொன்னதை தான் அவரும் கூறியிருந்தார். ஆனால் அழகிரி மீது பாலு அவதூறு வழக்கு தொடரவில்லை. என் மீது மட்டும் தொடர்ந்துள்ளார். அதில் அவர் சொன்ன அதே குற்றச்சாட்டை நாமும் முன்வைத்துள்ளோம்… என்று குறிப்பிட்டார் அண்ணாமலை.
மேலும், நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு தாக்கல் செய்த சத்திய பிரமாணத்தில் 3 நிறுவனங்களில் பங்கு தாரராக உள்ளேன் எனக் கூறியுள்ளார். ஆனால், ‛டிஎம்கே பைல்சில்’ அவரது குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி சொத்து உள்ளது தெளிவாக கூறப்பட்டு உள்ளது. பாலு, அவரது மகன் ராஜா, மற்றொரு மகன் ராஜ்குமார் ஆகியோர் எந்தெந்த நிறுவனங்களின் பங்குதாரர்களாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளோம். ஆனால் டி.ஆர்.பாலு அளித்துள்ள சத்திய பிரமாணத்திலேயே தவறான தகவலை தெரிவித்துள்ளார்.
நமக்கு எந்தக் குடும்பத்தையும் அரசியலில் இழுக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. ஆனால், எங்களின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க டி.ஆர்.பாலு குடும்பத்தினர் அனைவரையும் நீதிமன்றக் கூண்டில் ஏற்ற வேண்டும். இதனை நீதிபதியிடம் வலியுறுத்துவோம்.
நாங்கள் நெஞ்சவலி எனக் கூறி மருத்துவமனையில் போய் நாடகம் ஆட மாட்டோம். அவர்களிடம் நாங்கள் கேள்வி கேட்க வேண்டும். எங்களிடம் அவர்கள் கேள்வி கேட்கலாம். நாங்கள் எப்போதும் இங்கு இருப்போம்… என்றார்.
தொடர்ந்து, வாரிசு அரசியலால் உருவான 3ம் தலைமுறையினருக்கும், அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள முதல் தலைமுறையினருக்கும் இடையே நடக்கும் யுத்தம் இது. ஊழலுக்கு எதிரானவர்கள் எங்களுடன் இணைய வேண்டும். இந்த யுத்தம் ஓரிரு நாட்கள் நடப்பது கிடையாது. நீண்ட யுத்தம். அவர்களிடம் அதிகார பலம், பண பலம் எல்லாம் உள்ளது. நம்மிடம் மக்கள் ஆதரவு உள்ளது.
‛டிஎம்கே பைல்ஸ்’ 2வது பாகம் தயாராக உள்ளது. இது 300 நபர்களின் பினாமி சொத்து பற்றியது. இதனை மக்கள் நீதிமன்றத்தில் வெளியிடுவதா அல்லது ஆளுநரிடம் அளிப்பதா அல்லது சிபிஐ.,யிடம் கொடுப்பதா என யோசித்து வருகிறோம். எப்படியும் எனது பாத யாத்திரைக்கு முன்பு இதனை வெளியிட ஆலோசித்து வருகிறோம். பாத யாத்திரையின் போது அடுத்தடுத்த பாகங்கள் வெளியே வரும் என்றார் அண்ணாமலை.