கிங்ஸ்மீட் மைதானத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 351 ரன் குவிக்க, தென் ஆப்ரிக்கா 162 ரன்னில் சுருண்டது. 189 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 227 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மகாராஜ் 4, மார்கெல் 3, ரபாடா 2, எல்கர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 417 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் துரத்தலை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 136 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் மார்க்ராம் – குவின்டான் டி காக் 6வது விக்கெட்டுக்கு 147 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.
மார்க்ராம் 143 ரன் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் ஸ்டார்க் வேகத்தில் சொற்ப ரன்னில் வெளியேற, தென் ஆப்ரிக்கா 4ம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்துள்ளது. டி காக் (81 ரன்), மார்கெல் (0) களத்தில் இருந்தனர்.
இன்று 5-ம் நாள் ஆட்டத்தில் மேலும் 5 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாபிரிக்க அணி 298 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 4, ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.
இப்போட்டியில் 9 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.



