எனது பூத் வலிமையான பூத் – என்ற முழக்கத்துடன் பாஜக., தொண்டர்கள் கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, இன்று மாலை தொண்டர்களுடன் செயலியின் வாயிலாக பேசுகிறார்.
நாடாளுமன்றத் தேரதல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி தமிழகத்துக்கு 5 முறை வந்துள்ளார். மீண்டும் அவர் பிரசாரத்துக்காக தமிழகம் வருவதற்கு திட்டமிட்டுள்ளார். இதனிடையே தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களைத் தொலைபேசியில் அழைத்து, அவர்களுக்கு உத்ஸாகம் ஊட்டி, அவர்கள் தொகுதியில் என்ன பிரச்னை உள்ளது, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றெல்லாம் கேட்கிறார். இந்த உரையாடலை வீடியோவாக சமூகத் தளங்களில் வெளியிட்டும் வருகிறது பாஜக.,!
பிரதமர் மோடி அவ்வாறு கேரள மாநிலத்தில் போட்டியிடும் சரசு என்ற பேராசிரியையிடம் பேசும் வீடியோ சமூகத் தளங்களில் வைரலானது. அது போல் மேலும் பல வேட்பாளர்களிடம் பிரதமர் மோடி, போனில் பேசி, மக்களிடம் கொண்டு செல்ல பாஜக.,வினர் திட்டமிட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் வலைதள பக்கத்தில், தி.மு.க. ஆட்சியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில்…
“நமோ செயலி” மூலமாக இன்று மாலை 5 மணிக்கு நமது கடின உழைப்பாளிகளான பாஜக., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் “எனது பூத் வலிமையான பூத்” என்ற தலைப்பில் கலந்துரையாட உள்ளேன். தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள், திட்டங்களை பாரதிய ஜனதா கட்சியினர் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் திறம்பட கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்.
திமுக.,வின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் சலிப்படைந்து சோர்ந்து போய் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள் என்பதே உண்மையாகும். .. என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பேச்சுக்காக தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதனிடயே, தமிழக உளவுத் தகவல்கள் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக., இரண்டாம் இடத்திற்கு முன்னேறுவதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், திமுக., அதிமுக., இரனடு கட்சிகளுமே கைகோத்து செயல்படத் தொடங்கியிருக்கின்றன. பொது எதிரி பாஜக., என்பதாகக் கூறிக் கொண்டு, இரு திராவிடக் கட்சிகளும் இணைந்து செயல்படுவது, அதிமுக.,வுக்கு வாக்களித்து வரும் எம்ஜிஆர்., ரசிகர்களிடம் கடும் அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கிறது.