வைகோ.,வின் வாரிசு அரசியல், ஒருவரை தாயகத்தில் இருந்தல்ல… வையகத்தில் இருந்தே வெளியேற வைத்துவிட்டது. தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக, கடும் மன அழுத்தத்தில் இருந்த ஈரோடு மதிமுக., எம்பி., கணேசமூர்த்தி, திடீரென தன் உயிரை மாய்த்துக் கொள்ள தற்கொலைக்கு முயன்று, அதில் வெற்றி பெற்றிருக்கிறார். நேற்று காலை அவரது மரணச் செய்தி வெளியான போது, அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல சமூக தளங்களிலும் பலர் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியது இப்பப்டிதான்…
வாரிசு அரசியல் ஒருவரை போட்டு பார்த்து விட்டது! எந்த வாரிசு அரசியலுக்காக கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டேன் என்று தொண்டர்கள் 5 பேர் துடிதுடிக்க மரணித்த போதும் அதைச் சொல்லி கட்சியை வளர்த்து தொண்டர்களின் உணர்ச்சியைத் தூண்டி பேசி வந்த வைகோ, இன்று தனது வாரிசு அரசியலால் தன் கட்சியை சேர்ந்த ஒரு தியாகியை காவு கொடுத்து விட்டார். என்ற வகையில் கருத்துக்கள் பரவலாகக் காணக் கிடைத்தன.
பாஜக.,வின் மாநிலத் துணைத் தலைவர், நாராயணன் திருப்பதி இது குறித்துக் கூறிய போது, “அன்று கணக்கு கேட்டதால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஒருவர்… இன்று கணக்கு கேட்டதால். ‘வை’யகத்திலிருந்தே வெளியேறினார் ஒருவர்…. இது தான் திராவிட மாடலோ? அய்ய…. ‘கோ’ – என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டது… “ஈரோடு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை தமிழக அரசியலில் நிரந்தரமான கருப்பு புள்ளியை வைத்து விட்டது. வாரிசு அரசியலின் கோரம் அண்ணா அவர்களின் காலத்தில் அரசியலுக்கு வந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பலி வாங்கியுள்ளது என்றால் மிகையாகாது. வாரிசு அரசியலை எதிர்த்து வை கோ தனிக்கட்சி துவங்கிய போது பல தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்டது அந்த கட்சிக்கு உரம்போல் வித்திட்டது. ஆனால், பதவியும், பணமும், ஆசையும், நிலையில்லா எண்ணமும் வை கோ அவர்களையும், அவரின் ம தி மு கவையும் படுகுழியில் தள்ளி விட்டது. எந்த தி மு க வின் வாரிசு அரசியலை எதிர்த்தாரோ, அதே தி மு கவின் நிழலில் அண்டிப்பிழைக்கும் நிலை அவருக்கு வந்தது, தன் வாரிசின் அரசியல் நலன் கருதியே. எந்த தற்கொலைகள் ம தி மு கவின் துவக்கத்துக்கு, வளர்ச்சிக்கு வித்திட்டதோ அதே தற்கொலை தான் ம தி மு கவின் வீழ்ச்சிக்கும், முடிவுக்கும் வித்திட்டு விட்டது.
வை கோ அவர்களே, ம தி மு கவை இன்றே கலைத்து விடுவது தான் தற்கொலைகள் செய்து கொண்டு உயிர்நீத்த பல தொண்டர்களுக்கு நீங்கள் செய்யும் இறுதி மற்றும் ஒரே மரியாதை. – என்றார் நாராயணன் திருப்பதி.
ஈரோடு மக்களவைத் தொகுதி எம்.பி.,யாக இருந்தவர் கணேசமூர்த்தி. 2019-ம் ஆண்டு மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 72 மணி நேர சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை கணேச மூர்த்தி காலமானார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.
முன்னதாக கடந்த 24 -ஆம் தேதி கணேச மூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது கணேச மூர்த்தி மயக்க நிலையில் இருந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தைத் தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்பட்டது. இந்நிலையில் அவருக்கு நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.
இது குறித்து, மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறிய போது, கணேசமூர்த்தியும், நானும் உயிருக்கு உயிராகப் பழகினோம். அவர் கொள்கைப் பிடிப்புடன் பணியாற்றியவர். கொங்கு மண்டலத்தின் சிங்கமாக இருந்தவர். அவர் இப்படி ஒரு முடிவுக்கு வருவார் என்று நினைக்கவில்லை. எனக்கு இடி விழுந்தது போல் இருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் 2 சீட்டுகள் கிடைத்தால் நானும், துரையும் போட்டியிடுகிறோம் என்றார். ஒரு சீட் கிடைத்தால் துரையே நிற்கட்டும் என்றார். அதன் பிறகும் அவர் மகிழ்ச்சியாக தான் இருந்தார். எம்.பி. சீட் கிடைக்காததால் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்தார் என்று கூறப்படுவதில் துளி கூட உண்மை இல்லை. என்னை அவர் நட்டாற்றில் விட்டு விட்டுப் போவது போல செல்வார் என நினைக்கவில்லை. அவர் மறைந்த செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனஉறுதி கொண்டவர் மருந்து குடித்தார் என்பதை நம்ப முடியவில்லை. அவரது மன உளைச்சலுக்குக் காரணம் அவரது குடும்பத்தினரிடம் கேட்டால் தான் தெரியும். கணேசமூர்த்தி என்றும் திராவிட இயக்கத்தின் அழியா நட்சத்திரமாக இருப்பார்… என்றார்.
கணேசமூர்த்தியுடன் நெருங்கிப் பழகியவரும், மதிமுக., தொடக்க காலத்தில் வைகோவுடன் கரம் கோத்து வெளிவந்து மதிமுக.,வின் தூண்களின் ஒருவருமாக இருந்த வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், குறிப்பிட்ட போது, அனபு நண்பர் ஈரோடுகணேசமூர்த்தி காலமானார்…. வேதனை.. ஆழ்ந்த இரங்கல். இரவில் கடந்த நாட்களில் தன் நிலைமையை சொல்லி என்னிடம் பேசுவார். அவரிடம் மதிமுக ஆரம்பகட்ட முக்கியமாக இருந்த இன்னும் ஒன்றும் பெறா சிலர் பொன் முத்தராமலிங்கம், அடியேன், மாமீ, தங்கவேலு போன்றோர் பல ரணங்களை ஏற்று இருக்கிறோம். நீங்களாவது ஒரு முறை எம்எல்ஏ, மூன்று முறை எம்பி., சில தேர்தலகளில் வாய்ப்பைப் பெறமுடிந்தது. உங்களுக்கு என்ன விவசாயம், நல்ல குடும்பம் உள்ளது என சொல்லி அவரை ஆறுதல் படுத்துவேன். ஐயையோ மதிமுகவில் பயணித்த உணர்வுள்ள ஒரு மனிதர் மதிமுகவுக்காக உழைத்த தன் உயிரையே இழந்திருக்கிறார்.” என்று தனது வருத்தங்களைப் பதிவு செய்தார்.
கணேசமூர்த்தியின் மறைவு குறித்து சமூகத் தளத்தில் எழுதிய கே.எஸ்.இராதாகிருஷ்ணன், கணேச மூர்த்திகள்… பெண்கள் பொது வெளியில் தேவையற்று சிரிக்கக் கூடாது. ஆண்கள் பொது வெளியில் அழக்கூடாது. தண்ணீர் விட்டா வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்! – என்று தலைப்பிட்டு எழுதியிருக்கிறார். அவர் எழுதியதிலிருந்து…
பெண்கள் பொது வெளியில் தேவையற்று சிரிக்கக் கூடாது .ஆண்கள் பொது வெளியில் அழக்கூடாது. இது ஒரு மரபு இந்த மரபு ஏன் பாதுகாக்கப்படுகிறது என்றால் இந்த இரண்டிலுமே சமூகம் சந்தித்த கோளாறுகள் அதிகம்.
மிகுந்த அனுபவங்களுக்கு பிறகு தான் இத்தகைய முடிவுகள் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன. மதிமுகவின் ஈரோடு கணேச மூர்த்தி அவர்களின் மறைவிற்கு வைகோ குலுங்கி அழுகிறார். சரிதான் … துயரம்
எதற்கு இந்த அழுகை ?என்ன அப்படி துக்கம் பற்றிப் பரவுகிறது. உங்கள் ஏற்பாட்டின் படி தேர்வின் படி அவரை மூன்று முறை நாடாளுமன்றத்திற்கும் ஒருமுறை 1989இல் திமுக சட்டசபைக்கும் பரிந்துரைத்து ஜெயித்தார்.
பிறகு என்ன தான் அவருக்கு குறை ஏன் இறந்துவிட்டார். உங்களுக்கு ஏன் துக்கம். அப்படி அவர் உங்களுக்கு கொடுத்த விசுவாசத்திற்கு நீங்கள் கொடுத்த கொடுப்பினைகளுக்கு நாங்கள் சங்கடப்பட ஏதுமில்லை.
1996 சட்டமன்றத் தேர்தலில் மதிமுக சார்பில் நூற்றி என்பது பேர் போட்டியிட்டு நான்கு பேர் தான் அதில் வெற்றி பெற முடிந்தது. கோவில்பட்டி தொகுதியில் அதிக வாக்கு பெற்று கூட நான் அதில் தோல்வி அடைந்தேன் என் போன்றோர் தவிர.
பல இடங்களில் மதிமுக டெபாசிட்டைக் கூட காப்பாற்ற முடியவில்லை. பம்பர சின்னம் பெற பாடுகள். எத்தனை பாடுகள் எத்தனை சிரமங்கள் எத்தனை விதமான பிரச்சாரங்கள் அலப்பறைகள் மதிமுக நிலைத்து ஒரு நதியைப் போல ஓடிக் கொண்டிருக்கும் என்று நம்பி அதில் உழைத்த திமுகவை விட்டு வெளியே வந்த எங்களை போல எத்தனை பேருடைய கனவு தமிழ்நாட்டின் அரசியல் வாழ்க்கையில் வீணாகப் போய்விட்டது .
வைகோ குலுங்கி குலுங்கி அழுகிறார். யாருக்காக அழுகிறார்? அவருடைய வாரிசுகளுக்காக அவர் அரசியல் பங்கு பற்றலின் சுயநலத்திற்காக மதிமுகவின் உன்னதமான மிகச்சிறந்த தனித்துவமான மாற்று அரசியல் நிலைப்பாட்டை தமிழகத்தில் கொண்டுவர வேண்டிய வந்திருக்க வேண்டிய வலிமைகளை இழந்து போய் ஏன் அழுகிறார்.
நடந்தது என்ன அரசியல்வாதிகளின் பல பேருடைய மரணம் கிரிமினல் மரணமாக தமிழக வரலாற்றில் முடிந்து இருக்கிறது. ஆனால் மதிமுகவை நம்பி வாழ்ந்தவர்கள் எங்களை போன்ற பலரின் இருப்பு என்பது ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தவிர இன்றளவில் துக்கரமான சிவில் மரணங்களாக மாறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் உண்மையில் எதற்காக அழுகிறீர்கள் வைகோ.
வாரிசு அரசியல் கூடாது என்பதற்காக கம்பு சுழற்றினீர்கள் இன்று திமுகவில் உங்கள் அரசியல் வாரிசு ஆன துரை வைகோவை பாராளுமன்றத்தில் நிப்பாட்டுவதற்கு கடின முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். கணேச மூர்த்திகள் முடிந்து விட்டார்கள். வாரிசு எதிரி என சொன்னது நீங்கள்…. ஆனால்,இப்பொழுது உங்கள் மகன் தந்தைக்காகத்தான் அரசியலுக்குள் வந்தேன் என்கிறார் . நீங்கள் வேறு பாவம் ஏன்அழுது கொண்டிருக்கிறீர்கள். கண்ணீரைத் துடையுங்கள். எங்களுக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது.
#வைகோ #வாரிசுஅரசியல் #கணேசமூர்த்தி #மதிமுக