-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐபிஎல் 2024 – 28.03.2024 – ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
ராஜஸ்தான் அணி (185/5, ரியான் பராக் 84*, அஷ்வின் 29, ஜுரல் 20) டெல்லி அணியை (173/5, வார்னர் 49, ஸ்டப்ஸ் 44*, ரிஷப் பந்த் 28, மார்ஷ் 23, பர்ஜர் 2/29, சாஹல் 2/19) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஜெய்ப்பூரில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ராஜஸ்தான் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கும் யஸஸ்வி ஜெய்ஸ்வால் இன்றும் சரியாக ஆடவில்லை.
இரண்டாவது ஓவரில் 5 ரன்னுக்கு அவர் ஆட்டமிழந்தார். பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் சஞ்சு சாம்சனும் (15 ரன்) ஆடமிழந்தார். எட்டாவது ஓவரில் ஜாஸ் பட்லர் 11 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 36/3. அந்த இடத்தில் இருந்து 20ஆவது ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 185 ரன் எடுத்தது என்றால் அதற்கு அஷ்வின் (19 பந்துகளில் 29 ரன், 3 சிக்சர்) துருவ் ஜுரல் (12 பந்துகளில் 20 ரன், 3 ஃபோர்) ஆகியோர் விளையாடிய விதம்தான் காரணம். இவர்களோடு ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன், ஏழு ஃபோர், ஆறு சிக்சர்) மிகச் சிறப்பாக ஆடினார். குறிப்பாக 20ஆவது ஓவரில் 20 ரன் எடுத்தார்.
இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் பேட்டிங் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. நாலாவது ஓவர், இரண்டாவது பந்தில் மார்ஷ் (12 பந்தில் 23 ரன்) அவுட்டானபோது அணி 30 ரன் எடுத்திருந்தது. அந்த ஓவரிலேயே ரிக்கி புயி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த வார்னர் (34 பந்துகளில் 49 ரன்)12ஆவது ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர் ஸ்டப்ஸ் சிறப்பாக ஆடியும் டெல்லி அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் அந்த அணி 12 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை பெங்களூருவில் கொல்கொத்தா அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.