- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐபிஎல் 2024 – 27.03.2024 – ஹைதராபாத்
ம்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ்
ஹைதராபாத் அதிரடி ஆட்டம்
ஐபிஎல் ஆட்டங்களில் மிக அதிகமான ஸ்கோர்
ஹைதராபாத் அணி (277/3, ஹென்ரிச் கிளாசன் 80*, ட்ராவிஸ் ஹெட் 62, அபிஷேக் ஷர்மா 63, மர்க்ரம் 42* ) மும்பை அணியை (246/5, திலக் வர்மா 64, டிம் டேவிட் 42*, இஷான் கிஷன் 34, நமன் தீர் 30, ) 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஹைதராபாத்தில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அனி மூன்று விக்கட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது. ஒருநாள் ஆட்டத்திற்கே இது ஒரு சிறப்பான ஸ்கோர். டி20 ஆட்டத்திற்கு ரன் மழை என்றுதான் சொல்ல வேண்டும். விளையாடிய ஐந்து ஹைதராபாத் ஆட்டக்காரர்களில் மாயங்க் அகர்வால் மட்டும் சரியாக விளையாடவில்லை. மற்றவர்களின் ஸ்கோரிங் ரேட் 150க்கு மேல் இருக்க இவர் மட்டும் 84 என்ற வீதத்தில் ரன் சேர்த்தார். ட்ராவிஸ் ஹெட் (24 பந்துகளில் 62 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்) 18 பந்துகளில் 50 அடித்தார் என்றால், அபிஷேக ஷர்மா (23 பந்துகளில் 63 ரன், 3 ஃபோர், 7 சிக்சர்) 16 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர்களது இன்னிங்க்ஸ் இறுதியில் மர்க்ரம் (28 பந்துகளில் 42 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் கிளாசன் (34 பந்துகளில் 80 ரன், 4 ஃபோர், 7 சிக்சர்) இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர், பந்துவீச்சாளர்களில் பும்ராவைத் தவிர மீதமுள்ள அனைவரும் அதிக ரன் கொடுத்தனர்.
இரண்டாவதாக ஆட வந்த மும்பை அணியின் பேட்டிங் ஆரம்பத்தில் அமர்களமாக இருந்தது. இஷான் கிஷன் முதலில் 3.2 ஓவரில் ஆடமிழந்தார். அவர் 13 பந்துகளில் 2 ஃபோர் மற்றும் 4 சிக்சருடன் 34 ரன் கள் அடித்தார். அடுத்த ஓவரில் ரோஹித் ஷர்மா அவுட் ஆனார். அவர் 12 பந்துகளில் 1 ஃபோர் மற்றும் 3 சிக்சர்களுடன் 26 ரன் அடித்தார். நமன் தீர் 14 பந்துகளில் 30 ரன், திலக் வர்மா 34 பந்துகளில் 64 ரன் அடித்தனர். ஆனாலும் ரன்ரேட் மளமளவெனக் குறைந்தது. இறுதியில் கடைசி இரண்டு ஓவர்களில் 54 ரன்கள் அடிக்கவேண்டியிருந்தது. அப்போது 19ஆவது ஓவரில் மும்பை அணியால் 7 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. கடைசி ஓவரில் 15 ரன் அடித்தும் மும்பை அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஹைதராபாத் அணியின் அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.