- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐபிஎல் 2024 – 01.04.2024 – மும்பை
ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
மும்பை அணியை (125/9, திலக் வர்மா 32, ஹார்திக் பாண்ட்யா 34, போல்ட் 3/22, சாஹல் 3/11) ராஜஸ்தான் அணி (127/4, ரியன் பராக் 54, ஆகாஷ் மத்வால் 3/20) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் மும்பையில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. மும்பை அணியின் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கட்டுகள் விழுந்தன. ரோஹித் ஷர்மா மற்றும் நமன் தீர் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மூன்றாவது ஓவரில் டிவால்ட் ப்ரீவிஸ் பூஜ்யத்தில் அவுட்டானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மும்பை அணி மீண்டு வரவேயில்லை. திலக் வர்மா (32 ரன்) மற்றும் ஹார்திக பாண்ட்யா (34 ரன்) ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 125 ரன் எடுப்பதற்கே மும்பை அணி தடுமாறியது.
ராஜஸ்தான் அணியில் போல்ட் அற்புதமாக பந்துவீசினார். அவர் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் அவரது புள்ளி விவரம் 2 ஓவர்-மெய்டன் இல்லை-4 ரன்- 3 விக்கட். பின் ஓவர்களில் யஜுவேந்திர சாஹால் சிறப்பாக பந்துவீசினார். அவர் 4 ஓவர் வீசி 11 ரன் கொடுத்து மூன்று விக்கட் வீழ்த்தினார்.
126 என்ற எளிய இலக்கை அடைய, இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் முதல் மூன்று வீரர்கள் யஸஸ்வி ஜெய்ஸ்வால் (10 ரன்), ஜாஸ் பட்லர் (13 ரன்), சஞ்சு சாம்சன் (12 ரன்) சரியாக விளையாடவில்லை. அதன் பிறகு ஆடவந்த ரியன் பராக் (54 ரன்), மற்றும் அஷ்வின் (16 ரன் இருவரும் நன்றாக ஆடி அணிக்கு 15.3 ஓவரில் வெற்றியைத் தேடித்தந்தனர்.
ராஜஸ்தான் அணியின் ட்ரண்ட் போல்ட் சிறப்பான பந்து வீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடவிருக்கின்றன.