
நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முக்கிய விழாவான தேரோட்டம் ஜூலை 8ந் தேதி நடைபெறும்.அன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா தொடங்கியிருக்கிறது. ஜூலை 8-ல் நடைபெறும் தேரோட்டத்திற்காக அந்த நாளில் உள்ளூரில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒனன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் 518-வது ஆனிப் பெருந்திருவிழா, இன்று திங்கட்கிழமை காலை கோலாகலமாக வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, பக்திப் பரவசத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழா, அடுத்த பத்து நாட்களுக்கு மாநகரையே விழாக்கோலமாக்க உள்ளது.
இன்று அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் ஆனித் திருவிழா நடவடிக்கைகள் தொடங்கின. இதைத் தொடர்ந்து, மகா மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருளிய சுவாமி-அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன
காலை மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, நெல்லையப்பர் கோவிலின் கம்பீரமான கொடிமரத்தில் திருவிழாக் கொடி ஏற்றப்பட்டது. கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அழகிய அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆணிப் பெரும் திருவிழா தேரோட்டம் வரும் எட்டாம் தேதி நடைபெற உள்ளது.





