
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, “அவர் என்ன தீவிரவாதியா? தூக்கிச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளீர்கள்?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டது.
இதற்கு, அடித்துக் கொல்லப்பட்டவர் தீவிரவாதியா?, தூக்கிச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளீர்கள்? சாதாரண வழக்கில் கைதானவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத போது இதுபோன்று தாக்குதல் நடத்தி உள்ளது ஏன்? என்று, எஸ்.எம். சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 24 லாக் அப் மரணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது; அது பற்றிய விவரம் என்ன? என்று, அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது. இதை ஒரு மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்தது. இதை அடுத்து, இந்த வழக்கில் நாளை விசாரணை நடைபெறக் கூடும் என்று தெரிகிறது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் தமிழக எதிர்க்கட்சிகள் காரசார அறிக்கைகளை வெளியிட்டன. முக்கியமாக தமிழக பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை பெரும் கவனம் பெற்றது.
மூடி மறைக்கும் திமுக., : அண்ணாமலை கண்டனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், காவல்துறையினரும், அந்தப் பகுதி திமுகவினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் திமுகவினர், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் திமுகவினர் யாரும், காவல்துறை விசாரணையின்போது தாக்கப்படுவதில்லை. ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளைக் காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து, 23 பேர் காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர், இது குறித்து எந்தக் கவலையுமின்றி இருக்கிறார்.
தமிழகத்தில், ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் நண்பர்கள் குற்றம் செய்தால், அவர்களைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் திமுக அரசு, ஏழை எளிய மக்கள் என்றால், அவர்கள் உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
உடனடியாக, திருப்புவனம் இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகப் போராடும் திருப்புவனம் மக்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை. – என்று குறிப்பிட்டார் கு. அண்ணாமலை.
நயினார் நாகேந்திரன் கண்டனத்தில் கிளப்பிய சந்தேகங்கள்!
தமிழக பாஜக., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…
அருமை ஊடகங்களே, பத்திரிகை நண்பர்களே, பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் மரணம் தொடர்பான கீழ்க்காணும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் “காவல்துறை அமைச்சர்” திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இருந்து பதில்களை பெற்று தாருங்கள்.
1. காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?
2. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோவில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அவரைத் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?
3. விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து “உண்மையை” வரவழைக்க மாவட்ட SP திரு. ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே. இது உண்மையா? உண்மை எனில், யார் அவர்? அவர் மீது என்ன நடவடிக்கை?
4. இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டிவைக்கப்பட்டது ஏன்?
5. எளிய பின்புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற ஏளனமான எண்ணமா? அல்லது, உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் காவல் துறையினருக்கு தேவைப்பட்ட அவகாசம் தான் அந்த 4-மணி நேரமா?
6. நான்கு மணி நேரம் தாமதமாக அழைத்து வந்த காரணத்தினாலும், சந்தேகத்திற்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துள்ள காரணத்தினாலும், அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் குமாரை சடலமாக காவல்துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா?
7. அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?
8. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டத்தில் இறங்கிய அஜித் குமாரின் குடும்பத்தாரிடம் சடலத்தை பெற்றுக்கொள்ளவும், பிரச்சனையை பெரிதாக்காமல் இருக்கவும் திமுகவினரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்கள் மசியாமல் இருந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் திமுக கொடிப் பொருந்திய வாகனத்தில் அஜித் குமாரின் தம்பியான நவீனை மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயற்சித்தது எவ்வித அராஜக செயலாகும்? நீதியை தடுக்கும் பொருட்டு செயல்பட்ட @arivalayam அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது எப்பொழுது வழக்கு பதிவு?
9. இதுவரை திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா? தமிழகக் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? தொடர் காவல் மரணங்களுக்கு முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? இதற்கெல்லாம் முதல்வர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது எப்பொழுது? மக்கள் கேட்கிறார்கள்! – என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட கண்டன அறிக்கை!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதுடன், மிகுந்த கண்டனத்திற்குரிய செயலுமாகும்.
காவல்துறையின் இந்த அராஜகப் போக்கினால் உயிரிழந்துள்ள திரு.அஜித்குமார், திருப்புவனம் பகுதியில் அமைந்துள்ள மடப்புரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் தற்காலிக ஊழியராக செயல்பட்டு வந்துள்ளார். விசாரணை என்ற பெயரில் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரரை அழைத்துச் சென்ற காவல்துறையினர், செல்லும் வழியிலேயே அஜித்குமாரை கடுமையாக தாக்கியதாக அவரது சகோதரர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு பாலியல் புகாரளிக்க வந்த பெண்களை இதே காவல் துறையினர் தாக்கியுள்ளார்கள் என்ற செய்தியையும் அறியமுடிகிறது. எனில், இந்தக் காவல்துறையினர் என்ன மனநிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த அரசு விளக்க வேண்டும். போலி வாக்குறுதிகளும் பொய் புரட்டுகளும் நிரம்பிய இந்த போலி திராவிட மாடல் ஆட்சியில், அதிகாரிகளும், காவல் துறையினரும் அதிகாரத்தை தன்னிச்சையாக கையில் எடுத்துக் கொண்டு அத்துமீறி செயல்படுவது மிகப்பெரிய அவலம். பொம்மை முதல்வர் திரு.
@mkstalin அவர்களோ, தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய காவல்துறையை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பதன் விளைவு, அப்பாவி பொதுமக்கள் காவல்துறையின் துன்புறுத்தலால் உயிரிழக்கின்றனர். தற்போது நடந்துள்ள இந்த மரணத்திற்கு என்ன சொல்ல போகிறார் என்பது முதல்வருக்கே வெளிச்சம். அதேசமயம், காவல்துறை அதிகாரிகளும் சரி, ஏனைய துறை சார்ந்த அதிகாரிகளும் சரி, தாங்கள் அனைவருமே பொதுமக்களுக்கு சேவை புரிவதற்கு மட்டுமே. தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தையும் செல்வாக்கையும், அப்பாவி பொதுமக்கள் மீது அடக்குமுறையாக செலுத்துவது எவ்வகையிலும் நியாயமாகாது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு காவல்துறை என்ற நிலை தலைகீழாய் மாறி, காவல்நிலையம் சென்றாலே மக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை தற்போது உருவாகி வருவது வேதனை அளிக்கிறது. மேலும், அப்பாவியான திரு.அஜித்குமார் மரணத்திற்கு தமிழக காவல்துறையும், தமிழக அரசும், தார்மீகப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமென்று முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்..!
ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? : எடப்பாடி பழனிசாமி
சிவகங்கையில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரண விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கண்டனத்தில், “ஜெய்பீம் படம் பார்த்தேன்; உள்ளம் உலுக்கியது என சினிமா விமர்சனம் எழுதிய முதல்வர் எங்கே இருக்கிறார்?; நேரடி கட்டுப்பட்டில் உள்ள காவல் துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத முதல்வருக்கு கண்டனம். மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மனசாட்சி இருந்தால் முதல்வர் விலக வேண்டும்! : அன்புமணி
“திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக் கொலை – மனசாட்சி இருந்தால் முதல்வர் விலக வேண்டும்!” என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மனித உரிமைகளை சிறிதும் மதிக்காமல் ஸ்டாலின் காவல்துறை இளைஞரை அடித்தே கொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு வந்த மருத்துவர் ஒருவர், அவரது மகிழுந்தில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளை காணவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகிழுந்தை நிறுத்துவதற்கு உதவி செய்த கோயிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் என்பவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரனை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்து விட்டார். அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்? என்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், அவற்றை மதிக்காத காவல்துறையினர் அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலைகள் எவ்வாறு நடந்தனவோ, அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் அஜித்குமார் கொல்லப்பட்டுள்ளார். இதற்காக தமிழக காவல்துறையும், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தலைகுனிய வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் படுதோல்வி அடைந்து விட்ட காவல்துறை அப்பாவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ம்ர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது.
சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட போது, ’’பேய் ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்பதை இந்த படுகொலைகள் நினைவுபடுத்துகின்றன. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனசாட்சி இருந்தால், 5 ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்தியதைப் போல இப்போது பதவி விலக வேண்டும். – என்று குறிப்பிட்டுள்ளார்.





