
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழக அரசின் வருவாய் ரூ.1.81 லட்சம் கோடி, செலவு ரூ. 2.04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.,
2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் சில…
நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி ரூ.1500-லிருந்து, ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரூ. 48 கோடி செலவில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் விருதுநகர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் ரூ. 80 கோடியில் மகப்பேறு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மாநிலத்தில் தொழில்துறை முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் 2018-19ஆண்டில் வளர்ச்சி விகிதம் 9சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தமிழகம் நல்ல பலனை அடைந்துள்ளது.
செலவுக்கும், வருவாய்க்கும் இடையிலான இடைவெளி குறைந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை களைய அமைக்கப்பட்ட மாநில வளர்ச்சி நிதியத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கம் இலக்கு நிர்ணயம்.
வறுமை ஒழிப்புக்கான இயக்கத்தை ஒருமுகப்படுத்த தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரியம் செயல்படுகிறது.
ரூ.920.6 கோடி மதிப்பில் தமிழ்நாடு மாநில புத்தாக்கம் செயல்படுத்தப்படவுள்ளது.
அனைத்து ஊரக வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.520 கோடி ஒதுக்கீடு.
மத்திய அரசு நிதியுதவிடன், மாநில அரசும் திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது.
நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
மாநிலத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகைக்கு நிதி ஒதுக்கீடு.
திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பு கிடைக்க வழி வகுக்கப்படும்.
தொழில்பயிற்சி நிறுவனங்களில் ரூ.38 கோடி மதிப்பில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும்.
நலிந்த தமிழ் கலைஞர்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.1,500ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது.
வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு.
காவல்துறையின் பல்வேறு பயன்பாடுகளுக்கு 35 கட்டிடங்கள், 15 காவல் நிலைய கட்டிடங்கள், 543 குடியிருப்புகள் கட்டப்படும்.



