சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது! கண்டித்து தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் சாலைமறியல்!

Published:

road roko stalin - 2026

சென்னை: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்த ராமராஜ்ய ரத யாத்திரை, 5 மாநிலங்களைக் கடந்து தமிழகம் வந்தது. இது, ராமஜென்ம பூமியில் ராமர் கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத் திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் என சில கோரிக்கைகளை வலியுறுத்தி, விழிப்பு உணர்வைத் தூண்டும் வகையில் இந்த ரத யாத்திரை கிளம்பியது. மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகம், கேரளம் வழியாக தமிழகம் வந்த ரத யாத்திரை, நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக நுழைந்து, ராஜபாளையம் வந்து, அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை வருகிறது. மதுரையில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பின்னர் இந்த ரதம், ராமேஸ்வரம் செல்கிறது.

சிவராத்திரி அன்று அயோத்தியில் துவங்கிய இந்த யாத்திரை, 41 நாட்கள் 5 மாநிலங்களைக் கடந்து, வரும் மார்ச் 25 ராம நவமி அன்று ராமேஸ்வரத்தில் நிறைவடைகிறது. கேரளத்தில் இருந்து தமிழகம் வந்த இந்த ரதயாத்திரை மூலம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும், எனவே அனுமதி வழங்கக் கூடாது என திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப் பேரவையில் வலியுறுத்தின.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

இந்நிலையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினார் ஸ்டாலின். அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களை கடந்துதான் ரத யாத்திரை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. அங்கெல்லாம் பிரச்னை ஏற்படவில்லை. தமிழகத்தில் எல்லா மதத்தினருக்கும் எல்லா உரிமையும் உண்டு. எந்த பிரச்னையும் ஏற்படாமல் தடுக்க 129 பேர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரத யாத்திரை விவகாரத்தில் தேவையில்லாமல், அரசியல் சாயம் பூச வேண்டாம் என கோரினார். ஆனால், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், ஸ்டாலின் திமுக., எம்.எல்.ஏக்களை அவைக்காவலர்கள் வெளியேற்றினர்.

பின்னர், ரத யாத்திரையை ரத்து செய்ய கோரி முழக்கம்மிட்டபடி திமுக., உறுப்பினர்கள் வெளியேறினர். அவர்கள் அனைவரும் சட்டப்பேரவை எதிரே உள்ள பிரதான சாலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியலில் அமர்ந்தனர். சிறிது நேரம் முழக்கம் எழுப்பினர். பின்னர் ஸ்டாலினை கைது செய்வதாக போலீஸார் கூறினர். இதை அடுத்து அவர் கைது செய்யப் பட்டு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப் பட்டார். அவருடன் ஏராளமான திமுக., தொண்டர்களும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப் பட்டனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

இதனிடையே, ஸ்டாலின் கைதைக் கண்டித்து, தஞ்சாவூர் உள்ளிட்ட சில இடங்களில் திமுக.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலினை அந்தப் பகுதி வழியே வந்த புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி சந்தித்துப் பேசினார். .

Related articles

Recent articles

spot_img