தமிழ்த் திரையுலகம் சார்பில் நேற்று காலை மௌன அறவழி கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அதில் அஜித், சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. அஜித் வழக்கம் போல் தனி டிராக்தான். எந்த வித அலட்டலும் இல்லாமல் என் வழி தனி வழி என இந்த அரசியல் நிகழ்வுகளில் எல்லாம் கலந்து கொள்ளாமல் தன் கலையுலக வாழ்வில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு இருந்து விட்டார்.
இருந்தாலும் சிம்புவுக்கு மட்டும், தான் எதற்காக இந்த மௌனப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை உலகுக்கு தெரியப் படுத்தவேண்டிய உந்துதலுக்குத் தள்ளப்பட்டார். அதற்கான விளக்கத்தைக் கொடுக்க ஆசைப்பட்ட சிம்பு நேற்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது விதவிதமான ஐடியாக்களை எல்லாம் கொடுத்தார். எத்தனை பிரச்னைகள் உண்டோ அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என்ன என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. எனவே பல தீர்வுகளை கேமரா முன் நடிப்பது போலவே சொல்லிக் காட்டினார். கோபப் பட்டார். வசனம் பேசினார். கண் கலங்கினார்.
கேள்வி கேட்பது பத்திரிகையாளர்களாக இருந்தாலும், அவரால் அழைக்கப்பட்டிருந்த ரசிகர்களைப் பார்த்தே பெரும்பாலும் பதில் சொன்ன சிம்பு, ஒரு சில இடங்களில் கோபத்தில் பேச, அவரது ரசிகர்களும் அதற்குக் கை தட்டினர்.
திடீரென இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் காரணம் என்ன தெரியுமா எனக் கூறிய சிம்பு, தமிழ் சினிமாவில் பேய் பங்களாக்களை காட்டுவார்கள். பேய்கள் சும்மா தான் இருக்கும். அதுக்கு யாராவது தீங்கு செய்திருந்தா, பேய்கள் துரத்தி துரத்தி பழிவாங்கும். அது மாதிரி…
முதல்வராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்தது முதல் பிரச்னைகள்தான். பிரச்னை மேல் பிரச்னை. அங்க பிரச்னை, இங்க பிரச்னை… அட எல்லாம் பிரச்னைகள்தான் என்றவர், அவரது மரணத்தில் உள்ள உண்மை வெளிவந்தால்தான், இந்தப் பிரச்னைக்கெல்லாம் முடிவு கிடைக்கும் என்று சொல்லி முடித்தார்.
பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்தார்… கண்டதையும் எழுதுகிறார்கள் என்றார்….சமூக ஊடகங்களை வைத்து எழுதுகிறார்கள் என்றார்.
தோனிக்கு ஒரு ரிக்வஸ்ட் வேறு கொடுத்தார். கர்நாடகத்துகிட்ட கேட்டா போதும் தண்ணி வந்துடும் என்றார்.
ஒரு சந்தர்ப்பத்தில் காவிரியில் கர்நாடகா மக்களுக்கே தண்ணீர் இல்லாத போது அவர்கள் எப்படி தருவார்கள். வீணாகப் போகும் நீரை அவர்கள் நமக்குத் தரலாமே என்றார். அப்துல் கலாம் ஆவி சொன்னது, கர்நாடகத் தாய்மார்களிடம் மீதமான தண்ணியைக் கேட்போம் என என்னன்னவோ பேசினார். பொறுமையாக இருந்த பத்திரிகையாளர்கள் ஒரு கட்டத்தில் கேள்விகளால் துளைத்தார்கள் . அதற்கு பதில் சொல்ல முடியாத சிம்பு, சட்டென பத்திகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு ஓடிவிட்டார்.