நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நுழைவுச் சீட்டு, அடையாள அட்டையை காட்டி ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் கடந்த ஏப்ரல் 17ம் தேதி வெளியானது. இந்நிலையில், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது மாணவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கில், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தான் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில், தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் அங்குதான் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்க, தமிழ் சங்கம், கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முன்வந்தன.