புது தில்லி உயர் நீதிமன்றத்தின் பொன் விழாக் கொண்டாடங்களின் தொடக்க நிகழ்ச்சி, தில்லி விஞ்ஞான் பவனில் 31-10-2015 நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கீழமை நீதிமன்றங்களில் 2.6 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளது வருந்தத்தக்கது என்று தெரிவித்தார்.
மேலும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
நீதிபதிகள் நியமன முறை எதுவாக இருந்தாலும், அது வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும், நன்கு வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்; நீதிபதிகள் நியமன நடைமுறையில் யாரும் தலையிட முடியாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். மேலும், காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்ள, நீதித் துறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஜனநாயகத்தின் முக்கியத் தூணாக விளங்கும் நீதித் துறையின் தன்னாட்சி அதிகாரம், ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகவும் திகழ்கிறது. நீதிபதிகள் நியமன முறை எதுவாக இருந்தாலும், அது வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும், நன்கு வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். மேலும், நீதிபதிகள் நியமன நடைமுறையில் யாரும் தலையிட முடியாது. அதேசமயம், சுய பரிசோதனை மற்றும் தன்னார்வத் திருத்தங்கள் மூலம், நீதித் துறை காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
வழக்குகளுக்கு விரைவான தீர்வு: உச்ச நீதிமன்றத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 40 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இதேபோல், கீழமை நீதிமன்றங்களில் 2.6 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளது வருந்தத்தக்க விஷயமாகும்.
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவாகத் தீர்வு காணும் வகையில், நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்பட வேண்டியது அவசியமாகும். மேலும், நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி தேவைப்படுகிறது. நீதி வழங்கும் முறை, பொருளாதார ரீதியில் அனைவருக்கும் பொருந்தக்கூடியதாகவும், எளிதில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டியதும் முக்கியமாகும்.
பன்முகத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்: நாட்டில் ஜனநாயகம் செழித்து வளர ஒருமைப்பாடும், சகிப்புத்தன்மையும் முக்கியக் காரணிகளாக உள்ளன. இந்தியாவின் பழைமையான நாகரிகத்தில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது உயர்வான பண்புக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
பன்முகத்தன்மை நமது ஒட்டுமொத்த பலமாகத் திகழ்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், இதனை பிரதிபலிப்பதை நாம் அறிய முடியும். பல்வேறு காலகட்டங்களில் பல சோதனைகளைக் கடந்து வந்துள்ள பன்முகத்தன்மை எனும் நமது தனிச்சிறப்பை, எந்த விலை கொடுத்தேனும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும் என்றார் பிரணாப் முகர்ஜி.
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த, தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய முறையை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தின் பொன் விழா நிகழ்ச்சியில், நீதிபதிகள் நியமன முறை தொடர்பாக, பிரணாப் முகர்ஜி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ரோகிணி, தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



