அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கருணாநிதி, ஸ்டாலின் கூறத் தயாரா.? என்று மாநில வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சிமற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார் .
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் அரசின் சாதனைகளை விளக்கியும், திமுகவினரின் அவதூறு பிரசாரங்களைக் கண்டித்தும் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
ஊழலைப் பற்றி பேச திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு அருகதை இல்லை .மத்தியில் செல்வாக்குடனும், மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பிலும் இருந்த போது காவிரி நதிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காணாத திமுக தலைவர் கருணாநிதி, அப்பிரச்னைக்குத் தீர்வு காணுவதாக பேசி வருகிறார். தமிழ் இனத்தை காப்பாற்றுவதாகக் கூறி கடந்த 50 ஆண்டுகளாக ஏமாற்றுபவர் தான் கருணாநிதி.
இன்று இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவதற்கு கச்சத்தீவு பிரச்னைக்கு தீர்வு காணாததே காரணமாகும். இப்பிரச்னையைத் தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதவர் கருணாநிதி.
அதிமுக ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 99 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், திமுக பொருளாளர் ஸ்டாலின், 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் கூறுகிறார்.
எங்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் கூறத் தயாரா.?
தமிழகத்தில் திமுகவினரால் அபகரிக்கப்பட்ட ரூ.3000 கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்டுக் கொடுத்தவர் ஜெயலலிதா. உலக வங்கி, ஆசிய வங்கிகளே பாராட்டும் வகையில் தமிழகத்தில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருபவர் ஜெயலலிதா.
தமிழக மக்களை தம்மக்களாகக் கருதி, அவர்களின் நலனுக்காகப் பாடுபட்டு வருபவர் ஜெயலலிதா. வரும் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்று வைத்திலிங்கம் கூறினார்.
நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமைக் கொறடாவும், மாநகர் மாவட்ட அதிமுக செயலருமான ஆர். மனோகரன் தலைமை வகித்தார். மாநில அமைச்சர் டி.பி.பூனாட்சி, அதிமுக கொள்கைபரப்புத் துணைச் செயலர் நாஞ்சில் சம்பத், மக்களவை உறுப்பினர் ப.குமார், திரைப்பட நடிகை விந்தியா ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு. பரஞ்சோதி, சீ. வளர்மதி, மேயர் அ.ஜெயா, துணை மேயர் ஜெ.சீனிவாசன், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் வெல்லமண்டி என்.நடராஜன், முன்னாள் அமைச்சர் என். நல்லுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



