குடவாசல் சீரணி அரங்கத்தில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 44–வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைச்சர் காமராஜ் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு கையெழுத்திட்டவர் மு.க.ஸ்டாலின் என பேசினார்.
கூட்டத்திற்கு குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் பாப்பா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உறுப்பினர் கோபால் ஒன்றிய செயலாளர்கள் குருமூர்த்தி, நன்னிலம் ராம.குணசேகரன், சி.பி.ஜி.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் திரைப்பட நடிகர் ராமராஜன், திரைப்பட இயக்குனர் லியாகத்அலிகான், உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது அ.தி.மு.க.அமைச்சர் காமராஜ் கூறியதாவது:–
ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். இந்த பகுதியில் கல்லூரி வேண்டும் என்று தேர்தல் நேரத்தில் கூறியபோது அதை தான், முதலமைச்சரிடம் கூறினேன். அதனை உடனடியாக கொடுத்தவர் முதலமைச்சர். அந்த கல்லூரி இன்று புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதில் இப்பகுதி ஏழை மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த 60 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தந்தவர் தான் நமது முதலமைச்சர் ஜெயலலிதா என்பதை நான் நன்றியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
தி.மு.க. ஆட்சியில் காவிரி டெல்டா விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை போன்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க கூடிய வகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கும் சட்டசபையில் கையெழுத்திட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே விழுங்க நினைத்தவர் மு.க.ஸ்டாலின். ஆனால் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்க தடைபெற்றவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா. முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான ஆட்சிக்கு நீங்கள் என்றும் ஆதரவு தந்து 234 தொகுதிகளையும் வெற்றி பெற செய்து தி.மு.க. மற்றும் எதிர்கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்காத வகையில் செய்திட நாம் அனைவரும் சூளுரை மேற்கொள்வோம் என அமைச்சர் காமராஜ் பேசினார்.
கூட்டத்தில் குடவாசல், வலங்கைமான், நன்னிலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.



