பரமசிவனிடம் கேள்வி பாணங்கள்

ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் அவையில் இருந்த அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் எட்டு புலவர்களுள் ஒருவர் மகாகவி தூர்ஜடி.
அவர் தெலுங்கில் எழுதிய ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சதகத்தில் பரமசிவன் மேல் கேள்வி பாணங்களை விடுத்து தன்னை ஆட்கொள்ளும்படி பிரார்த்திக்கிறார். அவற்றிலிருந்து இரண்டு சுவையான செய்யுட்கள்:-
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா! பாணாசுரனைப் போல உன்னை என் வாசற்படியருகில் காவலில் இருத்தினேனா? அப்சரசுகள் மீது மோகத்தால் அவர்களிடம் உன்னை தூது விடுத்தேனா? திண்ணனைப் போல் எச்சில் மாமிசம் தின்றால் தான் ஆயிற்று என்று பலவந்தம் செய்தேனா? என்ன அபராதம் செய்தேன்? நல்லவர்களை காக்கும்படி வேண்டினேன். அவ்வளவு தானே? என் பிரார்த்தனையை காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பதேன்?

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா! உனக்கு மாமிச உணவின் மேல் விருப்பம் இருந்தால் உன் ஒரு கையிலே மான் உள்ளது. மறு கையிலே கூர்மையான பரசு உள்ளது. உன் நெற்றிக் கண்ணில் நெருப்புள்ளது. தலை மேல் நீர் உள்ளது. சிறிது சிரமப்பட்டால், உன் கையில் உள்ள கபாலத்தில் மான் மாமிசத்தை சமைத்து உண்டிருக்கலாமே! ஏன் அந்த திண்ணனின் எச்சில் மாமிசத்தின் மேல் ஆசை கொண்டாய்? உன் தகுதிக்கு அது இழுக்கல்லவா? இது போல் நீ செய்யலாமா?”

-ராஜி ரகுநாதன்