தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும் பொதுச்செயலாளரருமான
கேப்டன் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது செய்ததைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

நடிகரும், தற்போதைய திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அவர்களை கைது செய்ததை கண்டிக்கிறேன். ஜனநாயக நாட்டில் பல பேர், பல கருத்துக்களை அவரவர்கள் நினைப்பதை போல் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபமாக எத்தனையோ பேர், எத்தனையோ கருத்துக்களை பேசிவருவதும், காவல் துறையை தாக்குவதும், நீதிமன்றத்தை அவமதித்து பேசுவதும் என்று தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது. பல உதாரணங்களை சமீப காலமாக பார்க்கமுடிகிறது. ஆனால் கருணாஸ் அவர்களை மட்டும் கைது செய்து, அக்டோபர் 5ம் தேதி வரைக்கும் காவலில் வைப்பது என்பது தவறான செயலாகும். அப்படி இவர் பேசியது தவறு என்று தமிழக அரசு முடிவெடுத்தால், சமீப காலமாக எத்தனையோ பேர் அவரவர் கருத்துக்களை தொடந்து பதியவைத்துள்ளார்கள் அவர்கள் மீது இந்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. ஒரு சிலரை பழிவாங்கும் போக்கில் நடவடிக்கை எடுப்பதும், ஒரு சிலரை கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
மேலும் தண்டனை என்பது தவறு செய்பவர்கள் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும். தமிழக அரசாங்கம் என்பது அனைவருக்கும் நடுநிலையாக இருந்து நியாயமான ஒரு அரசாங்கமாக இருக்கவேண்டுமே தவிர, தங்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் இருந்து கொண்டு, ஆட்சியை தக்கவைப்பதற்காக தங்களுக்கு சாதகமாக செயல்படுத்துவது, இன்னொரு பக்கம் அச்சுறுத்தல் செய்வதற்காக இதுபோன்ற கைது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது.ஒரு கண்ணில் சுண்ணாம்பும், மறு கண்ணில் வெண்ணை வைத்து பார்க்கும் இந்த தமிழக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. தராசு மாதிரி சரிசமமாக தவறாக பேசுபவர்கள் யாராக இருந்ததாலும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்



