செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது; நீர் திறப்பும் குறைப்பு: அதிகாரிகள்

சென்னை:

சென்னை ஏரிகளில் நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது; செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் 10-ந்தேதி பூண்டி ஏரியில் 160 மில்லியன் கன அடி நீர் இருந்தது. நேற்று, அது 2,609 மில்லியன் கன அடியாக இருந்தது.
சோழவரம் ஏரியில் 86 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு நேற்று 809 மில்லியன் கன அடியாக அதிகரித்திருந்தது.

செங்குன்றம் ஏரியில் 408 மில்லியன் கன அடியில் இருந்து நேற்று 2,745 மில்லியன் கன அடியாக உயர்ந்தது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 791 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு நேற்று 3,108 மில்லியன் கன அடியாக அதிகரித்தது. இதனால் உபரி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4-ந்தேதி பூண்டி ஏரியில் 12 ஆயிரத்து 215 கன அடி வெளியேற்றப்பட்ட நீர், நேற்று 10 ஆயிரத்து 391 கன அடியாகக் குறைக்கப்பட்டது. சோழவரத்தில் 175 கன அடியில் இருந்து, நேற்று 100 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

செம்பரம்பாக்கத்தில் கடந்த 4-ந்தேதி 5 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்ட நிலையில், நேற்று 3 ஆயிரத்து 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது. செங்குன்றம் ஏரியில் மட்டும் கடந்த 4-ந்தேதி 1,894 கன அடியாக இருந்தது, நேற்று சற்று கூடுதலாக 1,967 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த ஏரிகளின் நீர்திறப்பு படிப்படியாகக் குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தின் உயரம் 24 அடியாகும். அதில் தற்போது 21.95 அடி உயரம் வரை நீர் தேக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் வரவு 3 ஆயிரத்து 493 கனஅடியாகும். நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3 ஆயிரத்து 500 கனஅடி ஆகும். செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் தற்போது பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.