மதுரை அரசு மருத்துவமனை பிரேத அறை ஊழியர் விஜயனின் மனித நேயம்

மருத்துவமனையில் பிரேதங்களை பரிசோதனை செய்யும் பகுதி பக்கம் செல்லவே பெரும்பாலோர் சங்கடப்படுவார்கள்.

இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத அறையில், பிரேதத்தை பரிசோதனை செய்யும் ஊழியர் விஜயன், அவரது 1 மாத சம்பளம் 13 ஆயிரம் மற்றும் வீட்டில் வைத்திருந்த 7 ஆயிரம் ஆக மொத்தம் ரூ. 20 ஆயிரத்தை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து நேற்று ஒப்படைத்துள்ளார்.

மிக கஷ்டமான வேலையை செய்யும் பிரேத அறை ஊழியர் விஜயனிடம் அவர் வெள்ள நிவாரண நிதி அளித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது கூறியதாவது :-

“தமிழகத்தில் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடும் மழை வெள்ளத்தால் மக்கள் படும் துன்பங்களை பார்த்து என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நானும் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். என்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் இந்த மாத வீட்டு செலவை எப்படியாவது சமாளித்து கொள்வோம் என்றும் இந்த மாதத்தின் சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுக்கப் போகிறேன் என்றும் சொன்னேன். அவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.
இப்போதுதான் எனக்கு சம்பளம் ரூ.13 ஆயிரம் வந்தது.

எனது மகள் சேமித்து வைத்து கொடுத்த பணத்தையும் சேர்த்து ரூ. 20 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து கொடுத்துள்ளேன்” என மனிதநேயம் கொண்ட பிரேத அறை ஊழியர் விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததார் .

மக்களின் வரிப் பணத்தில் தமிழக அரசாங்கம் பொதுமக்களுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளுக்காக செலவிட பெரும் தொகையை ஒதுக்குகிறது.

அவ்வாறு ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய்களை பெரும்பாலான அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை பொதுநல திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந்து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனமின்றி உள்ளனர்

இந்த நிலையில் தற்போது சென்னை மீளக் காரணம் அரசியல் போன்று எவ்விதமான இலவச சுய விளம்பரமும் தேடிக் கொள்ள ஆசைப்படாமல் இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு மனித நேயத்துடன் உதவிக்கரம் கொடுத்த தனியார் அமைப்புகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் மனிதநேயம் கொண்ட தனி மனிதர்களும்தான் என்றால் மிகையல்ல.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மனித நேயத்துடன் உதவிக் கரம் கொடுத்த, கொடுத்துக் கொண்டுள்ள அனைவருக்கும் தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தளம் நிறுவனம் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.