மதுவிலக்கு 2 கட்டங்களாக அமல்படுத்தப்படும் என அறிவிப்பு

 
 
 
2 கட்டங்களாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் ஏப்ரல் 1–ந் தேதி முதல் முழு மது விலக்கு அமல் இல்லை என்றும், பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அறிவித்தார்.
 
அதன் காரணமாக அந்த கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதன்படி, அங்கு தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 26–ந் தேதி நடந்த மதுவிலக்கு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்ர் நிதிஷ்குமார், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதியில் இருந்து, பீகாரில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
 
தற்போது நிதிஷ்குமார் அரசு பல்டி அடித்துள்ளது. ஒரே கட்டமாக அங்கு முழு மது விலக்கு அமல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுபற்றி மாநில கலால் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் அப்துல் ஜலில் மஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:–
 
மாநிலத்தில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 1–ந் தேதி முதல் உள்நாட்டு மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.
 
6 மாதங்கள் கழித்து இரண்டாவது கட்டமாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.
 
நகர்ப்புறங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் (பி.பி.சி.எல். என்றழைக்கப்படும் பீகார் மதுபான கழகம்) வெளிநாட்டு மது பானங்கள் அரசு கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
 
மாநிலம் முழுவதும் மதுபான கடைகள் நடத்துவதற்கு உரிமம் வழங்கும் முறை ஒழித்துக்கட்டப்படும் என்று அப்துல் ஜலில் மஸ்தான் தெரிவித்துள்ளார்.