சுப்ரமணிய சுவாமி பிரதமர் மோடியின் முகமூடி : காங்கிரஸ் குற்றசாட்டு

 
நேஷனல் ஹெரால்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அரசை தாக்கிப் பேசி வரும் காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடியின் முகமூடி தான் சுப்ரமணிய சுவாமி, என்று கருத்துத் தெரிவித்துள்ளது.
 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
 
நேஷனல் ஹெரால்டு வழக்கைத் தொடர்ந்த சுப்ரமணியன் சுவாமி, மோடியின் முகமூடியாகச் செயல்படுகிறார் என்று கூறியிருந்தனர். மத்திய அரசு பழிவாங்கும் அரசியலை நடத்துகிறது.
 
மோடியின் இதுபோன்ற நடவடிக்கைகளால் காங்கிரஸ் பயந்துவிடாது. இந்த தடைகளை எல்லாம் தகர்த்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஆசாத் கூறினார்.
 
மேலும் இந்தியா இதுவரை இதுபோன்ற அரசியலைப் பார்த்ததில்லை. இந்த பழிவாங்கும் அரசியலை எதிர்த்துப் போராடுவோம். காங்கிரஸ் கட்சியினரை நீதிமன்றத்துக்குக் கொண்டு வருவோரை பாரதிய ஜனதா கட்சி அரசு கௌரவிக்கிறது.
 
சுப்ரமணியன் சுவாமிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இல்லை, அவருக்கு தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை, காங்கிரஸ் தலைவர்களை நீதிமன்றத்துக்கு வரவழைத்ததற்காகவே இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
 
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது,