பீப் பாடல் வெளியிட்ட சிம்பு – அனிருத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.

திரைப்பட நடிகர் சிம்புவும், இசை அமைப்பாளர் அனிருத்தும் இணைந்து பாடிய பாடல் சமூக வலைதளங்களில் பரவியதும், பெண்கள் அமைப்புகள் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. பீப் சாங் என்று கூறப்படும் அதில் பெண்களை ஆபாசமாகவும், கேவலமாகவும் சித்தரித்து உள்ளனர். இவர்களின் வக்கரித்துப்போன உள்ளம் எப்படிப்பட்டது என்பதை உணர முடிகிறது.

சென்னை மாநகரம் மழை வெள்ளத்தால் மூழ்கிப் போய் இலட்சக்கணக்கான மக்கள் நாதியற்று நடுத்தெருவில் அலைந்து திரிந்த கொடுமை நேர்ந்த போது சிம்பு, அனிருத் இருவரும் இந்த ஆபாசப் பாடலை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

உலக நாகரிகத்தின் தொட்டில் பூமியான தமிழகத்தில் பழம்பெரும் பண்பாட்டுச் சிறப்பும், பெண்களை உயர்வாக மதித்துப் போற்றும் இயல்பும் அற்றுப்போய் வருகிறது. திரைப்படங்களில் பெண்களை மோசமாக சித்தரிக்கும் அநாகரிக போக்கு வளர்ந்து வருவது வேதனை அளிக்கிறது.

ஒரு காலத்தில் திரை இசைப் பாடல்கள்தான் சமூகத்தைச் சீர்படுத்தவும், உயர் நெறிகளை வளர்க்கவும், நாட்டு விடுதலைக்காக போராடும் வீர உணர்ச்சியை ஊட்டவும் பயன்பட்டன. சமூகத்தில் உயர்தனிப் பண்புகளை உருவாக்கும் வகையில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் மருதகாசி, கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன் போன்றோரின் பாடல்கள் எக்காலத்திலும் அழியாப் புகழ்மிக்க காவியங்களாக நிலைத்து இருக்கின்றன.

மகாகவி பாரதி தடம் அமைத்த தமிழ் இலக்கிய உலகில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் வாணிதாசன், சுரதா, கவிஞர் முடியரசனார் போன்றோர் காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்தனர். சிவகங்கை கவிஞர் மீரா, கவிக்கோ அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, கவிஞர் புவியரசு, கவியரசு வைரமுத்து போன்றோர் தமிழ்க் கவிதைச் சோலையில் புதுமைகள் படைத்துத் தமிழுக்கு ஏற்றம் தந்தனர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் போன்றோர் படைத்த எரிமலைக் கவிதைகள் இன உணர்வுக் கனல் அணையாமல் தமிழ் மண்ணில் இளைஞர்களைத் தட்டியெழுப்பி வருகின்றன.இவ்வாறு வரலாறு பேசும் தமிழ்நாட்டில் சிம்பு, அனிருத் இயற்றியுள்ள பாடல் சமூகச் சீரழிவுக்கு வித்திட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். தமிழக அரசு இவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.