சென்னையில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா?: ஐ.டி. நிறுவனங்கள் ஆழ்ந்த யோசனை!

சென்னை:
கனமழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளானவை ஐ.டி. நிறுவனங்களும்தான்! பெரும் வருமான இழப்பைச் சந்தித்துள்ள ஐ.டி.நிறுவனங்கள் எதிர்காலத்தில் சென்னையிலேயே தங்களால் நீடிக்க முடியுமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதனால் ஊழியர்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஐ.டி. நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு விடுப்பு, முன்னதாகவே சம்பளப் பணத்தில் ஒரு பகுதியை வழங்குதல் உள்ளிட்டவற்றால் திருப்தி செய்துள்ளன.

அண்மையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல வீடுகள், கட்டடங்கள், அலுவலகங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தாம்பரம், முடிச்சூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, பெரும்பாக்கம், தரமணி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. பெரும்பாலான ஐ.டி.நிறுவனங்களின் தரைத் தளங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு, பெரும் சேதம் அடைந்தன. இதில், ராமபுரம் டி.எல்.எப். வளாகத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவனங்கள் தற்போது வெள்ள பாதிப்பு குறைந்த பிறகும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றது. டி.எல்.எஃப்பில் இயங்கி வந்த சில நிறுவனங்கள் தாற்காலிகமாக தங்கள் ஊழியர்களை நகரின் வேறு கிளை அலுவலகங்கள், அல்லது பெங்களூர், மைசூர், தில்லி உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மாற்றி விட்டு சமாளிக்கின்றன.

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு கணினிவழி சேவை செய்து வருமானம் ஈட்டிவந்த நிறுவனங்கள், வெள்ளம் கொடுத்த இழப்பில் இருந்து மீள முடியுமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. முன்னணி நிறுவனங்களைத் தவிர, நடுத்தர நிறுவனங்கள் பெரும் வருமான இழப்பைச் சந்தித்துள்ளன.

சென்னை வெள்ளத்தில் ஒரு வாரம் எந்த வேலையும் நடைபெறாத நிலையில், இந்தக் காலாண்டு வருமானம் பெருமளவில் குறையும் என்று பிரபல நிறுவனங்களான டாடா, விப்ரோ தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அவற்றின் பங்குச் சந்தை நிலவரத்திலும் மாற்றம் ஏற்பட்டு பங்கு மதிப்பும் சரிந்தது.

டேக் சொல்யூஷன்ஸ் போன்ற நடுத்தர சாப்ட்வேர் நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பங்கு மதிப்பு ஒரு சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. சென்னையில், 450 ஊழியர்களுடன் இயங்கும் இந்த நிறுவனம், கனமழை வெள்ளத்தில் ஒரு வாரம் முழுவதும் மூழ்கி இருந்ததால் ஊழியர்கள் பணிக்கு வரவே இயலவில்லை. வேல எதுவும் நடைபெறவில்லை. இதே போல பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஹெக்சாவேர் நிறுவனமும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. சென்னையில் உள்ள இதன் கிளை அலுவலகம் மூலம்தான் உலக அளவில் 23% வருமானத்தை அந்நிறுவனம் ஈட்டி வந்தது. வெள்ளத்தால் இப்போது அந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிர்வாகம் திகைத்துப் போயுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதியான பெருங்களத்தூரில் இயங்கி வரும் அசெஞ்சர் நிறுவனமும் இதே பாதிப்பில் உள்ளது.

சில நடுத்தர நிறுவனங்கள் பெங்களூரு,கோவைக்கு மாற்றப்பட்டு, அதன் பணியாளர்கள் அங்கே மாற்றப்பட்டனர். அதனால், அதன் பணிகள் ஓரளவே பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், திருச்சி, மதுரை போன்ற சிறு நகரங்களுக்கு இடம்பயரலாமா என்று சில நிறுவனங்கள் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பல ஐ.டி. நிறுவனங்களும், ஒரு வார கால அலுவலக முடக்கத்துக்குப் பின்னர், நிலுவைப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக, தங்கள் நிறுவன ஊழியர்களை இரவு வெகு நேரம் வரை இருக்க வைத்து, பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில் எதிர் காலத்தில் சென்னையில் தொடர்ந்து தங்கள் வர்த்தகத்தை நீடிக்க முடியுமா என்ற யோசனையில் ஐ.டி. நிறுவனங்கள் பலவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.