அவிநாசியில் தினமும் 100 ஆதரவற்றவர்களை தேடிச்சென்று இலவசமாக உணவு வழங்கி வரும் பெண் மருத்துவரின் சேவை மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கம் கடந்தாண்டு தொடங்கி தற்போது 2-ம் அலை பரவல் தீவிரமடைந்துள்ளது இதுவரை ஏற்பட்டுள்ள பல்வேறு பொருளாதார மாற்றங்கள் பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
முன்னதாக, அங்கொன்றும், இங்கொன்றுமாக சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களின் எண்ணிக்கை, கொரோனா ஏற்படுத்திய தாக்கத்துக்கு பிறகு இன்னும் அதிகரித்துள்ளது.
ஆதரவற்று சாலையோரங்களில் வசிப்போருக்கு ஆதரவளிக்கும் கரங்களும் வெவ்வேறு வடிவங்களில் நீண்டு கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் சாலையோரங்களில் தஞ்சமடைந்துள்ள ஆதரவற்றவர்களுக்கு காலை மற்றும் மதிய நேரங்களில் தினமும் 100 பேருக்கு முட்டை, இறைச்சி உள்ளிட்ட பலவகை உணவுகளை இலவசமாக வழங்கி வருகிறார், அவிநாசி – மங்கலம் சாலையில் மருத்துவமனை நடத்திவரும் பெண் மருத்துவர் குகப்பிரியா.
முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமை அவிநாசி பகுதியில் மக்கள் வீடுகளில் முடங்கிய நிலையில் இட்லி, அவித்த முட்டை உள்ளிட்ட உணவுகளை காலை நேரம் தனியாக தனது காரில் எடுத்துச் சென்று, அவிநாசி புதிய பேருந்து நிலையம், திருப்பூர் சாலை, மங்கலம் சாலை, சேயூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் தங்கியுள்ள ஆதரவற்றோருக்கு வழங்கினார்.
இதுதொடர்பாக மருத்துவர் குகப்பிரியா கூறும்போது, “கடந்த 2 ஆண்டுகளாக இப்பணியை செய்து வருகிறேன். காலை மற்றும் மதியம் இரு வேளைகள் சேர்த்து 100 பேருக்கு அவர்களை தேடிச் சென்று உணவு வழங்கி வருகிறேன். காலை நேரத்தில் சூடான இட்லி, வடை மற்றும் அவித்த முட்டை உள்ளிட்ட வகைகளும், மதியம் சூடான சாதமும் வழங்குகிறேன். சில நாட்களில் அசைவ உணவுகளும் வழங்கி வருகிறேன்.
உணவுகளை வழங்க பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் பயன்படுத்துவதில்லை. பாக்கு மட்டை உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
கொரோனா பாதிப்புக்கு பிறகு சாலைகளில் ஆதரவு இல்லாமல் நிற்போரை அதிகமாக பார்க்க முடிகிறது. இவ்வாறு ஆதரவற்ற நிலையில் உணவுக்காக சிரமப்படுவோருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இதை செய்து வருகிறேன். இதில் வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை” என்றார்