தி.மு.க பட்டமரம் : இனி துளிர் விடாது : ராமதாஸ்

 
 
தி.மு.க பட்டமரம் : இனி துளிர் விடாது : என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
 திருச்சியில் நேற்று ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது : –
 
சென்னை மழை வெள்ளம், ஒரு பாடத்தை நமக்கு கற்றுத்தந்தது. எனவே, திருச்சியை துணை தலைநகராக அறிவிக்க வேண்டும். திருச்சியில், ஆயிரம் ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. தவிர, ஏழு வழித்தடத்தில் ரயில் சேவையும், சர்வதேச விமான நிலையமும் உள்ளன. வேளாண், இயற்கை வளம் சார்ந்த துறைகள் சிலவற்றை, திருச்சிக்கு இடமாற்றம் செய்யும் போது, புதிய தொழில் வேலை வாய்ப்பு ஏற்படும். ஏன், ஒரு சில கூட்டத் தொடரைக் கூட, திருச்சியில் நடத்தலாம். ‘2013ம் ஆண்டுக்குள், 5,000 மெ.வா., மின் உற்பத்தி, 3,000 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யப்படும்’ என, முதல்வர் அறிவித்தார்.
 
நான்கு ஆண்டு முடிந்தும், ஒரு யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்ய வில்லை. சர்க்கரை ஆலைகள், 1,050 கோடி ரூபாய் கரும்புக்கான நிலுவை தொகையை இழுத்தடிப்பு செய்கின்றன. தமிழகத்தின், வேளாண் வளர்ச்சி விகிதம் மைனஸ், 12.1 சதவீதமாக குறைந்து, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி, 2.42 லட்சம் கோடி முதலீடு வாங்கியதாக அறிவித்து, ஒரு மாதத்தில் தொழில் துவங்க அனுமதி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
 
ஆனால், 100 நாட்கள் ஆகியு,ம் இன்று வரை ஒரு தொழிற்சாலைக்கு கூட அனுமதி வழங்கவில்லை. இது, முதல்வரின் ஏமாற்று வேலை. பார்லி கூட்டத்தொடரில், ஆறு மசோதாக்கள் நிறைவேற்ற எதிர்கட்சிகள் அனுமதிப்பதாக அறிவித்தன. இதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டத்திருத்த மசோதா இடம்பெறவில்லை. ஏற்கனவே கூட்டத் தொடரில் ஜல்லிக்கட்டு குறித்து விவாதித்து இருந்தால், தற்போது மசோதாவில் இடம் பெற்று இருக்கும். அவசர சட்டத்தை இயற்றி, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில், தற்போது உள்ள சூழலில், ஐந்து, ஆறு கூட்டணி கட்சிகள் உருவானாலும், சட்டசபை தேர்தலில் ஆளும், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக வெற்றி கிடைக்காது. அதுபோல தி.மு.க பட்டமரம் :இனி துளிர் விடாது.
 
முதலமைச்சர் ஜெயலலிதா சிறைக்கு போவது உறுதி. சரியான கணக்கு போட உச்சநீதிமன்றத்தில் நிறைய நீதிபதிகள் உள்ளனர். சென்னை வெள்ள பாதிப்புக்கு முன், பின் என்ற கருத்து கணிப்புகள் பொய்யானவை. ஒரு வாரப் பத்திரிக்கை, 5,000 கோடி பணத்தை வாங்கிக்கொண்டு கருத்து கணிப்பை தொடர்ந்து அவர்களுக்கு சாதகமாக வெளியிட்டு வருகிறது. ராஜ்ஜியத்தை இழந்தவர், ராஜநடை போட்டு நடந்து வருகிறார். நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.